தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி ‘ஒன்மோட்டோரிங்’ இணையத்தளம் தொடர்பான மோசடியில் $28,000 இழப்பு

1 mins read
faf9b81c-fa17-421e-9bf3-11638c6e30d3
பாதிக்கப்பட்டவர்கள், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டோரிங்’ போன்ற போலியான மின்னஞ்சல்களைப் பெற்றனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

போலி மோட்டார் வாகன இணையத்தளம் சம்பந்தப்பட்ட மோசடியினால் செப்டம்பர் மாதம் குறைந்தது எட்டுப் பேர் மொத்தமாக கிட்டத்தட்ட $28,000 இழந்துள்ளனர் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டோரிங்’ (OneMotoring) என்ற தளத்திலிருந்து வருவதுபோன்ற போலியான மின்னஞ்சல்கள் அவர்களுக்கு வந்தன. அவர்களது வாகனத்துக்கான ‘சாலை வரி அல்லது சாலை உரிமம் காலாவதியாகிறது’ என்று அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டதாக காவல்துறை கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் போலி ‘ஒன்மோட்டோரிங்’ இணையத்தளத்துக்கு இட்டுச் செல்லப்பட்டனர். அதில் அவர்கள் தங்கள் வாகனப் பதிவு எண், தனிப்பட்ட தகவல்கள், கடன் - ரொக்கக் கழிவு அட்டை விவரங்களைப் பகிர்ந்துள்ளனர். தங்கள் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்தபோதுதான் தாங்கள் மோசடிக்கு உள்ளானதை அவர்கள் உணர்ந்தனர்.

சாலை வரி காலாவதியாவது குறித்து வாகன உரிமையாளர்களுக்கு மின் அஞ்சல் வழியாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பதில்லை என்றும் அவர்களின் கடிதத் தொடர்புகளில் கட்டண இணைப்புகள் இருக்காது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மோசடி தடுப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்வது, வங்கிக் கணக்குகளுக்கும் மின் பணப்பைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமைப்பது போன்றவை இதில் அடங்கும்.

ஓர் இணையத்தளம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், 1800-722-6688 என்று மோசடி தடுப்பு உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது www\.scamalert\.sg\. என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்