மனிதவள அமைச்சின் அதிகாரிகள்போல் நடித்து $379,000 மோசடி

2 mins read
dd5a31f3-059c-42c7-914c-dcd7b6e574da
பணப் பரிமாற்றம் செய்யச் சொல்வது, வங்கிக் கணக்குகளின் விவரங்களைக் கேட்பது அல்லது செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடமாட்டார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் முதல், மோசடியாளர்கள் தங்களை மனிதவள அமைச்சின் அதிகாரிகள் எனக்கூறிக் கிட்டத்தட்ட 379,000 வெள்ளி மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அறிக்கை வெளியிட்டது. இந்த நிதி இழப்புகள் குறைந்தது ஆறு வழக்குகளுடன் தொடர்புடையது என்று காவல்துறை கூறியது.

மோசடியாளர்கள் தொலைப்பேசி அழைப்புமூலம் பொதுமக்களை அழைத்துத் தங்களை மனிதவள அமைச்சின் அதிகாரிகள் என்று கூறி அறிமுகம் செய்துகொள்வர்.

அதன்பின்னர் மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சட்டவிரோத நடவடிக்கை, குடிநுழைவு சார்ந்த பிரச்சினை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாகக் கூறி மிரட்டுவார்கள்.

மேலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, விசா முடிந்தும் சிங்கப்பூரில் இருப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறி மக்களைப் பயமுறுத்துவார்கள்.

மோசடியாளர்கள் கூறுவதை மக்கள் மறுத்தால் அந்த அழைப்பை உயர் அதிகாரிக்கு மாற்றுவதாகக் கூறி மோசடியாளர்கள் நாடகமாடுவார்கள்.

அதன்பின்னர் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறி மோசடியாளர்கள் மக்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பெற்றுக்கொண்டு வங்கியில் உள்ள நிதியைத் திருடுவார்கள்.

மேலும் இந்த விசாரணை குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மோசடியாளர்கள் மிரட்டுவார்கள்.

சில நாள்களுக்குள் அழைப்பதாகக் கூறி மோசடியாளர்கள் தப்பித்துவிடுவார்கள். அதற்குப் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது பொதுமக்களுக்குப் புரிந்து காவல்துறையை அணுகுவார்கள்.

“பணப் பரிமாற்றம் செய்யச் சொல்வது, வங்கிக் கணக்குகளின் விவரங்களைக் கேட்பது அல்லது செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடமாட்டார்கள்,” என்று காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் மோசடிகள் தொடர்பாகச் சந்தேகம் இருந்தாலும் காவல்துறையின் 1800-255-0000 என்ற தொலைப்பேசி எண்ணை அழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

உடனடியாக உதவி வேண்டும் என்றால் 999 என்ற தொலைப்பேசி எண்ணை அழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்