குவைத் சிட்டி: தெற்கு குவைத்தின் மங்கஃப் நகரில் ஊழியர்கள் தங்கிய கட்டடத்தில் புதன்கிழமை (ஜூன் 12) காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற குவைத் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசோஃப் சௌத் அல் சபா, இதனைத் தெரிவித்தார்.
அந்த ஆறு மாடிக் கட்டடத்தில் கேரளா, தமிழகம், வடஇந்தியாவைச் சேர்ந்த 196 ஊழியர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வலம் வந்த புகைப்படங்கள், அக்கட்டடத்தின் வெளிப்புறத்தில் கறும்புகை படிந்திருந்ததைக் காட்டின.
காலை 6 மணியளவில் தீச்சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாக மேஜர் ஜெனரல் ஈத் ரஷீத் ஹமட் கூறினார்.
கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ மூண்டதைத் தொடர்ந்து, புகை எழுந்ததில் அங்கு வசித்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் குழுவினர், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி இறந்த சிலரின் உடல்களை அடையாளம் கண்டனர்.
இறந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால், உயிர்பிழைத்தவர்களைப் பார்க்க தாம் மருத்துவமனையில் இருந்ததாக குவைத்துக்கான இந்தியத் தூதர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தீ விபத்தில் காயமுற்ற 30க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறியதாக என்டிடிவி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தாம் பேரதிர்ச்சி அடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சொன்னார்.
கட்டட உரிமையாளர்கள் பேராசையுடன் இருந்ததாகவும் விதிமீறியதாகவும் குற்றஞ்சாட்டிய குவைத்தின் தற்காப்பு, தற்காலிக உள்துறை அமைச்சருமான திரு ஷேக் ஃபஹத், தீவிபத்துக்கு இதுவே காரணம் என்றார்.
இச்சம்பவம் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரிடம் கவனக்குறைவுடன் இருந்ததன் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது.
பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கண்டறியப்படும் கட்டடங்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர், என்று திரு ஷேக் ஃபஹத் எச்சரித்தார்.
“ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்களைத் தங்க வைப்பது, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாங்கள் பாடுபடுவோம்.
“சட்ட நடைமுறைகள் முடியும்வரை தீ மூண்ட கட்டடத்தின் உரிமையாளரை நாங்கள் தடுத்து வைப்போம்,” என்றார் அவர்.

