சமூக ஊடகங்களில் கப்பல் பயண விடுமுறைக்கான நல்ல சலுகை போலத் தோன்றும் ஒன்றைக் கண்டால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கப்பல் பயணத் தொகுப்புகள் விற்பனை தொடர்பான இணையவழி வர்த்தக மோசடிகளில் குறைந்தது $53,000 இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமையன்று (மே 15) காவல்துறை வெளியிட்ட ஓர் ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் இதுபோன்ற குறைந்தது 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை மேலும் கூறியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில், ஜென்டிங் ட்ரீம் கப்பல் பயணம் போன்ற கப்பல் பயணத் தொகுப்புகளின் பட்டியல்களைக் காண்பார்கள் என்று காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பட்டியல்களுக்குப் பதிலளிக்கும்போது, மோசடிக்காரர்கள் அவர்களை வாட்ஸ்அப்பில் உரையாடல்களைத் தொடருமாறு நம்ப வைப்பார்கள்.
அந்தத் தொகுப்புகளை முன்பதிவு செய்ய, பேநவ் (PayNow) கியூஆர் குறியீடுகள் மூலம் பணம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படும். ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, வரிகள் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்களுக்காக மேலும் பணம் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்பார்கள்.
மேலும், சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போலியான முன்பதிவு பயணத் திட்டங்களை அனுப்பியுள்ளனர் என்றும் காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரபூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் கப்பல் பயண ஏற்பாட்டாளர்களிடம் சரிபார்க்க முயன்றபோதும், அல்லது காவல்துறையால் மோசடி நிகழ்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் கப்பல் பயணத் தொகுப்புகளைக், கப்பல் பயண ஏற்பாட்டாளர்களின் அதிகாரபூர்வ இணையத்தளம் அல்லது உரிமம் பெற்ற பயண முகவர்கள் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது.
சந்தேகம் இருந்தால், 1799 என்ற எண்ணில் ஸ்கேம்ஷீல்ட் உதவி எண்ணை அழைக்கலாம்.

