சிங்கப்பூரில் ஜூன் மாதம் மின்வர்த்தக மோசடியில் 80க்கும் மேற்பட்டோர் மொத்தம் $177,000ஐ இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரோசல், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் மூலம் பொருள்களை வாங்குவதுபோல் நடித்த மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.
இவ்வாறு மின்வர்த்தகத் தளங்களில் பொருள் வாங்குவதுபோல் வேடமிட்டு ஏமாற்றும் சம்பவங்கள் சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்குவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் விற்பனைக்கு அறிவித்திருக்கும் பொருள்களை வாங்க விரும்புவதாக மோசடிக்காரர்கள் முதலில் அவர்களை அணுகுவர். பின்னர் பொருளுக்கான தொகையைப் பெறுவதற்காகவோ அதனை அஞ்சலில் அனுப்புவதற்காகவோ இணையத் தொடர்பு முகவரி ஒன்றை விற்பவருக்கு அனுப்புவர்.
பொருளை விற்க ஒப்புக்கொண்டவர் அந்த இணைய முகவரிக்குச் செல்லும்போது தொகையைப் பெற்றுக்கொள்ள தனது வங்கிக் கணக்கு அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை அங்கு பதியும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். பணத்தை இழந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்வார்.
சிங்கப்பூரில் நடக்கும் மின்வர்த்தக மோசடிகள் ஐந்தில் மூன்று, ஃபேஸ்புக், கேரோசல் தளங்கள் வாயிலாக நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.