சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் எனவே மற்ற எதிர்க்கட்சிகள் அந்தக் குழுத்தொகுதியிலிருந்து விலகி நிற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) தெலுக் பிளாங்கா ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்று குடியிருப்பாளர்களை சந்தித்துப் பேசிய சீர்திருத்த மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலாளர் லிம் தியன் மேற்கண்டவாறு பேசினார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியுடன் தமது கட்சி நேரடியாகப் போட்டியிடப் போவதாக திரு லிம் தியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய திரு லிம், மூம்முனைப் போட்டி குறித்து தாம் கவலையடையவில்லை என்றும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் தாம் பணி செய்து வந்துள்ளதாகவும் அங்கு வசிப்போரிடையே தாம் நன்கு அறிமுகமாகி உள்ளதாகவும் கூறினார்.
“சீர்திருத்த மக்கள் கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் குரல் கட்சி அந்தக் குழுத்தொகுயில் 2018ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளது.
“எனவே, கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் தஞ்சோங் பகாரை வலம் வந்துள்ளோம். தஞ்சோங் பகாரை நாங்கள் நன்கு அறிவோம்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டி போட்டன. இதில் மக்கள் செயல் கட்சி 63.1 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியது.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி இருக்காது எனத் தாம் நினைப்பதால் அது பற்றிய கவலை தமக்கு இல்லை என்று திரு லிம் தியன் கூறினார்.