தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
முதல் ‘ஐஎஸ்ஏஎஸ் - கட்டார் குடும்ப விரிவுரைத் தொடர்’

இந்தியப் பொருளியல் வளர்ச்சி, வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்த விரிவுரைத் தொடர்

3 mins read
b7b6bd10-2044-4926-997a-01d8df4703ef
இந்தியப் பொருளியல், வாய்ப்புகள் குறித்த விரிவுரையைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், அமிதாம் கண்ட் (இடது), இணைப் பேராசிரியர் இக்பால் சிங் சேவியா. - படம்: லாவண்யா வீரராகவன்

அடுத்த 30 ஆண்டுகளில் அனைத்துலகப் பொருளியல் வளர்ச்சியில் ஆசியா உள்ளிட்ட வளர்ந்துவரும் சந்தைகள் முன்னணி வகிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பங்காளித்துவம் முக்கியம் என்று இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஜி20 பங்கேற்பாளர் அமிதாப் கண்ட் கூறியுள்ளார்.

‘மாற்றம் காணும் இந்தியாவுக்கான தேசிய கழகத்தின்’ முன்னாள் தலைமை நிர்வாகி யுமான அவர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகம் சார்பில் நடைபெற்ற விரிவுரையில் இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் முதன்மையாகவும் இந்தியாவின் ஆறாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் விளங்குவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றிய ‘கட்டார் ஹோல்டிங்ஸ்’ தலைவர் சத் பால் கட்டார்.
நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றிய ‘கட்டார் ஹோல்டிங்ஸ்’ தலைவர் சத் பால் கட்டார். - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூரில் தெற்காசிய நாடுகளில் நடைபெறும் முக்கிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய கண்ணோட்டங்களை உருவாக்கவும் ஐஎஸ்ஏஎஸ் - கட்டார் குடும்ப விரிவுரைத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் விரிவுரை, வியாழக்கிழமை (அக்டோபர் 2) ‘நிலையற்ற உலகில் இந்தியாவின் எழுச்சி: வாய்ப்புகளும் சவால்களும்’ எனும் தலைப்பில் செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

வெறும் பத்தாண்டுகளுக்கு முன்பு ‘வலுவற்ற ஐந்து’ பொருளியல் பட்டியலிலிருந்து தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளியலாக இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது குறித்தும் ஆறு முக்கிய வளர்ச்சி அம்சங்கள் குறித்தும் திரு அமிதாப் பேசினார்.

இந்தியாவின் மின்னிலக்க முன்னேற்றம், கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், தொழில்முனைப்புச் சூழல், கரிம நீக்கம், பசுமை வளர்ச்சி, தொழில்நுட்பப் புரட்சி ஆகியவை குறித்தும் அவர் விளக்கினார்.

2047க்குள் தனிநபர் வருமானம் எட்டு மடங்கு உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒன்பது மடங்கு உயர்வு, உற்பத்தி 16 மடங்கு உயர்வு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுடன் ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை நோக்கி இந்தியா பயணிப்பதையும் திரு அமிதாப் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகின் நிலையற்ற தன்மை, அனைத்துலக விநியோகத் தொடர், தொழில்நுட்ப இடையூறுகள், பருவநிலை மாற்றம் அனைத்துலக அளவில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், நகரமயமாதல், மாநிலங்களின் சீரற்ற வளர்ச்சி உள்ளிட்ட ஐந்து உள்நாட்டு அளவிலான சவால்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

“அனைத்துலக அளவில் அரசுத் தரப்பு, கொள்கை வகுப்புகளைச் சேர்ந்தோரை வரவழைத்துத் தெற்காசிய நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், உலக விவகாரங்களில் வகிக்கும் பங்கு ஆகியவை குறித்து கலந்துரையாடுவது இந்தத் தொடரின் நோக்கம்,” என்றார் தெற்காசிய ஆய்வுக் கழக இயக்குநர் இக்பால் சிங் சேவியா.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஜி20 பங்கேற்பாளரும் ‘மாற்றம் காணும் இந்தியாவின் தேசிய நிறுவனத்தின்’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் கண்ட் விரிவுரையாற்றுகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஜி20 பங்கேற்பாளரும் ‘மாற்றம் காணும் இந்தியாவின் தேசிய நிறுவனத்தின்’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் கண்ட் விரிவுரையாற்றுகிறார். - படம்: லாவண்யா வீரராகவன்

வழக்கறிஞர், தொழிலதிபர், சமூகத் தலைவர், இந்தியாவின் ‘பத்ம விருது’ பெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையைக் கொண்ட சத் பால் கட்டாரின் ஆதரவில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தொடரை ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் இணைப் பேராசிரியர் இக்பால் சிங் கூறினார்.

தொழில், கல்வி, வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றதாகக் கூறிய அவர், “இந்தியப் பொருளியல் மாற்றங்கள், பல்வேறு பொருளியல் முகப்புகள், வாய்ப்புகள் குறித்து அறிய இந்த விரிவுரை உதவும் என நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

“இந்தியாவின் வளர்ச்சி குறித்து செய்திகளில் அறிகிறோம். ஆனால், துறை நிபுணரிடமிருந்து ஆழமான தகவல்களைத் தெரிந்துகொண்டது புரிதலை மேம்படுத்தும் விதமாக அமைந்தது,” என்றார் விரிவுரையில் பங்கேற்ற முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் நிறுவனருமான அ.முஹம்மது இர்ஷாத்.

குறிப்புச் சொற்கள்