இனமும் சமயமும் அண்மையில் அரசியலுடன் கலந்துவிட்டாலும் அது சிங்கப்பூருக்கான வழியன்று என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இன, சமய அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகளைக் குறிப்பிட்டுப் பேசிய 73 வயதான திரு லீ, மலேசியாவைப் போலன்றி சிங்கப்பூரின் அரசியல் கட்சிகள் இன, சமய அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இந்தக் காரணத்திற்காகத்தான் முஸ்லிம் விவகார அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கு ஆதரவு அளிக்க தாம் தெம்பனிஸ் வந்திருப்பதாக மூத்த அமைச்சர் லீ செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை வழிநடத்தும் திரு மசகோஸ், பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளை எதிர்த்துப் பொருதுகிறார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் உள்ள பேரங்காடிக்கு வெளியே செய்தியளார்களிடம் பேசிய மூத்த அமைச்சர் லீ, திரு மசகோஸ் முஸ்லிம் விவகார அமைச்சராக இருந்தாலும் தம் தொகுதியிலுள்ள எல்லா இன, சமயக் குடியிருப்பாளர்களையும் பிரதிநிதிப்பவர் எனத் தெரிவித்தார்.
அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் திரு மசகோஸ், எல்லாச் சிங்கப்பூரர்களின் நலனையும் பேணுவதாகத் திரு லீ கூறினார்.
அத்துடன், சிங்கப்பூர்த் தேர்தலில் தலையிடும் வகையில் வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் பதிவுகளைக் குறிப்பிட்டு, “இதனுடன், இணையத்தில் நடக்கும் விளையாட்டுகளைப் பற்றியும் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,” என்று மூத்த அமைச்சர் லீ வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்தப் பதிவுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மலாய் மொழியிலும் பேசி திரு லீ, நாம் அனைவரும் ஒரு மக்கள், ஒன்றுபட்ட நாடு. இன, சமய கோடுகளால் பிளவுபடவில்லை. “நம் நாட்டின் நன்மைக்காகவும் சிங்கப்பூரின் எல்லோர்க்குமான ஒளிநிறைந்த எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து இப்படி இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
மலாய், முஸ்லிம் சமூகத்திற்காக அரசாங்கம் பாடுபட்டு வருகிறது என்ற அவர், அதற்கு எடுத்துக்காட்டுகளாக புதிய பள்ளிவாசல்களின் உருவாக்கத்தையும் இஸ்லாமியக் கல்லூரியின் அறிமுகத்தையும் சுட்டிக்காட்டினார்.
அவருக்குப்பின் பேசிய திரு மசகோஸ், பிராசரக் கூட்டங்களில் இன, சமய பிரிவினைகளைக் கொண்ட உரைகள் நின்றுள்ளபோதும் இணையத்தில் இந்தப் போக்கு நீடிப்பது கவலைக்குரியது என்றார்.
இத்தகையை கருத்துகள் நஞ்சுக்கு ஒப்பானவை என வருணித்த திரு மசகோஸ், சிங்கப்பூரில் தற்போது நிலவும் அமைதியை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

