38 ஆக்ஸ்லி சாலை வீட்டை இடித்து அவ்விடத்தில் ஒரு சிறிய தனியார் வீட்டைக் கட்ட விண்ணப்பம் செய்யப்போவதாக சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் ஆக இளைய மகனான லீ சியன் யாங் தெரிவித்துள்ளார்.
அந்தச் சொத்து குடும்பத்துக்கு என்றென்றும் சொந்தமானதாக இருக்கும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான திரு லீ, அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதுகுறித்து யாரிடம் விண்ணப்பம் செய்யப்படும் என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.
அந்த வீட்டில் வசித்து வந்த அவரது சகோதரி டாக்டர் லீ வெய் லிங் அக்டோபர் மாதம் 9ஆம் தேதியன்று காலமானார்.
அமரர் திரு லீ குவான் யூவின் உயிலின் கூட்டு நிர்வாகிகளாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுபவர்களாகவும் டாக்டர் லீயும் திரு லீ சியன் யாங்கும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
38 ஆக்ஸ்லி சாலை வீடு குறித்து மூத்த அமைச்சர் லீயுடன் தங்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர்.
தங்கள் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக, தமது அரசியல் லாபத்துக்காக அந்த வீட்டை இடிக்காமல் பாதுகாக்க அப்போது பிரதமராக இருந்த திரு லீ சியன் லூங் விரும்புவதாக அவர்கள் இருவரும் குறைகூறினர்.
ஆனால் இதைத் திரு லீ சியன் லூங் மறுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமது தந்தையின் உயில் தயாரிக்கப்பட்ட விதம், சூழல் குறித்து அவர் சந்தேகம் எழுப்பினார்.
2015ஆம் ஆண்டில் அந்த வீட்டை திரு லீ சியன் யாங்கிடம் மூத்த அமைச்சர் லீ சந்தை விலைக்கு விற்றார்.
அதற்கு முன்னதாக, வீட்டின் மதிப்பில் 50 விழுக்காட்டுத் தொகையை இருவரும் நன்கொடை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மூத்த அமைச்சர் லீ விதித்தார்.
வீட்டு விற்பனை மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் மூத்த அமைச்சர் லீ நன்கொடையாக வழங்கினார்.
அந்த வீட்டில் டாக்டர் லீ வெய் லிங் வசித்து வந்தார்.
அவரது மரணத்துக்குப் பிறகு தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.
இந்நிலையில், அந்தச் சொத்தை உரிமை கொண்டாடி திரு லீ சியன் யாங் அக்டோபர் 15ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“நான்தான் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டின் ஏக உரிமையாளர். எனது சகோதரியின் இறப்புக்குப் பிறகு எனது தந்தை திரு லீ குவான் யூவின் உயிலில் குறிப்பிட்டிருப்பவற்றை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இருக்கிறது.
“வெய் லிங் அந்த வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அதை உடனடியாக இடிக்க வேண்டும் என்று எனது தந்தை அவரது உயிலில் குறிப்பிட்டிருந்தார். அதை நிறைவேற்றுவது எனது கடமை.
“வெய் லிங்கின் இறப்புக்குப் பிறகு வீட்டை இடிப்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று 2015ஆம் ஆண்டில் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு கூறி ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன. முடிவெடுக்கும் நாள் வந்துவிட்டது,” என்று திரு லீ சியன் யாங் தெரிவித்தார்.