திரு லீ சியன் யாங், தனிப்பட்ட பகைமையை வைத்துக்கொண்டு தம் தந்தை, குடும்பம், நாட்டை அனைத்துலக அரங்கில் களங்கப்படுத்துவதாக சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) ஊடகத்துக்கு திரு லீ அண்மையில் அளித்த பேட்டிக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 31) பதிலளித்த அரசாங்கம் இதனைக் கூறியது.
சிங்கப்பூரில் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் இங்கு ஊழல் மோசமடைந்துள்ளதாகவும் திரு லீ முன்வைத்துள்ள குறைகூறல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.
பிரிட்டனில் ஆகஸ்ட் மாதம் அரசியல் அடைக்கலம் பெற்ற திரு லீ, விமர்சகர்களைக் குறிவைக்கும் வண்ணம் சிங்கப்பூரின் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமது பேட்டியில் கூறினார். அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு பெற கூடுதலான சிங்கப்பூரர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் அவர் சொன்னார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு திரு லீ இரண்டாவது முறையாக அரசாங்கத்தைக் குறைசொல்லி அனைத்துலக ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். ஏற்கெனவே, பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் இதேபோன்ற மனக்குறைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
திரு லீ, அரசாங்கம் பற்றி சமூக ஊடகங்களிலும் குறைகூறி வந்துள்ளார். குறிப்பாக, அவரின் தந்தை அமரர் லீ குவான் யூவின் 38 ஆக்ஸ்லி சாலை வீடு குறித்து அவர் பல பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
திரு லீயின் கூற்று பற்றி ஏபி செய்தி நிறுவனத்தின் கேள்விக்குப் பதிலளித்துள்ள அரசாங்கம், சிங்கப்பூர் முறையால் பேரளவில் பலனடைந்தவர் திரு லீ சியன் யாங் என்று குறிப்பிட்டது.
“இந்த எல்லா உண்மைகளைப் பற்றியும் அவருக்குத் தெரியும். ஊழல் இடம்பெற்றதாக அவர் சுட்டிய அனைத்து எடுத்துக்காட்டுகளுக்கும் நீதிமன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“திரு லீயின் கூற்றுகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதில், நீதிபதிகள் குழுவும் (Court of Three Judges) ஒழுங்குமுறை தீர்ப்பாயமும் வழங்கிய முடிவுகளை ஏபி கருத்தில்கொள்ள வேண்டும்,” என அரசாங்கம் கூறியது.
அமரர் லீ குவான் யூவின் கடைசி உயிலைச் செயல்படுத்துவதில் திரு லீ சியன் யாங்கும் அவரின் மனைவி திருவாட்டி லீ சுவெட் ஃபென்னும் ‘அடுக்கடுக்கான பொய்களை’ சொன்னதும் அமரர் லீயை அத்தம்பதி தவறாக வழிநடத்தியதும் கண்டறியப்பட்டது.
2022ல் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய அத்தம்பதி, இதுவரை நாடு திரும்பவில்லை.

