அமைச்சர்கள் கா. சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன்மீது அவதூறு பரப்பும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டமைக்காக அவர்களுக்கு லீ சியன் யாங் இழப்பீடு தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்விரு அமைச்சர்களின் ரிடவுட் ரோடு வாடகை பங்களாக்கள் தொடர்பில் திரு லீ கருத்து பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்து, இரு அமைச்சர்களும் திரு லீக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கு விசாரணை தொடர்பில் திரு லீ முன்னிலையாகி, விளக்கம் அளிக்கத் தவறினார்.
அவர் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அடுத்த விசாரணையின்போது மதிப்பிடப்படும் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து அந்த பங்களாக்களை வாடகைக்குப் பெறுவதில் இரு அமைச்சர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டதால் அவர்கள் தனிப்பட்ட ஆதாயம் பெற்றதாகவும் அவர்கள் முறைதவறி நடந்துகொண்டதாகவும் திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது.
இதனையடுத்து, இதுபோன்று தவறான, அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளைப் பதிவிடவும் அல்லது பரப்பவும் திரு லீக்கு நீதிபதி கோ யி ஹான் தடைவிதித்தார்.
நவம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்பட்ட எழுத்துவழித் தீர்ப்பில், திரு லீ அப்படி மீண்டும் அவதூறான கருத்துகளை வெளியிடலாம் என்ற முடிவிற்குத் தாம் வர வலுவான காரணங்கள் இருப்பதால் தாம் அவருக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி கோ குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரு லீக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக அவதூறு வழக்கு தொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
திரு லீ, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இளைய மகனும் இப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரருமாவார்.
திரு லீ சிங்கப்பூரைவிட்டு வெளியில் இருப்பதால், அவருக்கு செப்டம்பர் 15ஆம் தேதி ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக நீதிமன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டன.
திரு லீ நீதிமன்ற ஆவணங்களைப் பார்த்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அமைச்சர்களுக்கு இல்லை என்றபோதும், அவற்றைத் தாம் பார்த்துவிட்டதாக செப்டம்பர் 16ஆம் தேதி அவர் ஒரு பதிவின்மூலம் தெரிவித்திருந்ததை நீதிபதி கோ சுட்டிக்காட்டினார்.
அவற்றுக்கு விளக்கமளிக்க திரு லீக்கு 21 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர் பதிலளிக்கவில்லை.

