தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்கள் சண்முகம், விவியனுக்கு $600,000 இழப்பீடு வழங்கிய லீ சியன் யாங்

3 mins read
21ebd67c-231b-45a5-828d-d11a55eab4b4
பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்தபோது அதுதொடர்பாகத் தங்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்க நிலப் போக்குவரத்து ஆணையத்தை உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகமும் (நடுவில்) வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் (வலது) பணித்ததாக 2023 ஜூலை 23ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு லீ சியன் யாங் (இடது) பதிவிட்டிருந்தார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ்

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பற்றி சமூக ஊடகம் வாயிலாக அவதூறு பரப்பியதற்காக திரு லீ சியன் யாங் இழப்பீட்டுத் தொகையாக $600,000க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.

இரு அமைச்சர்களும் ரிடவுட் சாலையில் உள்ள பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்தது குறித்து திரு லீ சமூக ஊடகத்தில் தமது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

அந்த பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்தபோது அதுதொடர்பாகத் தங்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க நிலப் போக்குவரத்து ஆணையத்தைத் திரு சண்முகமும் டாக்டர் விவியனும் பணித்ததாக 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு லீ பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் சண்முகம், அமைச்சர் விவியன் பற்றி அவதூறு பரப்பியதற்காக இழப்பீட்டுத் தொகையாக அவர்களுக்கு மொத்தம் $619,335.53 வழங்கிவிட்டதாக செப்டம்பர் 29ஆம் தேதியன்று திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

திரு லீ சியன் யாங், சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூவின் மகனும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் சகோதரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை, ரிடவுட் சாலையில் உள்ள அந்த இரண்டு பங்களா வீடுகளுக்கான 13.6 மாத வாடகைக்கு ஈடாகும் என்றார் திரு லீ.

தமக்கு எதிராக அந்த இரு அமைச்சர்களும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்காதது துரதிஷ்டவசமானது என்று அவர் தெரிவித்திருந்தார்.

மறைந்த திரு லீ குவான் யூவின் குடும்ப வீடு (38 ஆக்ஸ்லி சாலை) சிங்கப்பூரில் தமக்கு இருக்கும் முக்கிய சொத்தாகும் என்றும் திரு லீ சியன் யாங் குறிப்பிட்டார்.

அந்த வீடு தொடர்பாகத் தமது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்குடனும் நோய்வாய்ப்பட்டுள்ள தமது சகோதரியான டாக்டர் லீ வெய் லிங் தொடர்ந்து அங்கு வசிப்பதை அனுமதிக்கவும் இரு அமைச்சர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதாக திரு லீ கூறினார்.

திரு லீயின் கருத்துகளுக்கு திரு சண்முகமும் டாக்டர் விவியனும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

திரு லீயின் கருத்துகள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டன என்றும் சிங்கப்பூரர்கள் அவற்றைப் படிக்க வேண்டும் என்ற நோக்குடன் பதிவிடப்பட்டன என்று அவரிடம் சுட்டியபோது திரு லீயால் பதில் சொல்ல முடியவில்லை என்று இரு அமைச்சர்களும் கூறினர்.

“இதுதொடர்பாக அமைச்சர்கள் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று திரு லீ கூறுகிறார். நாங்கள் கேட்ட கேள்விக்கு அது பதில் அல்ல,” என்று திரு சண்முகமும் டாக்டர் விவியனும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

“எங்களைக் குறுக்கு விசாரணை செய்யுமாறு அவரிடம் வலியுறுத்தினோம். அவரும் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறினோம். அப்போதுதான் அவர் கூறுவது சரி, நாங்கள் கூறுவது தவறு என்று அவரால் சிங்கப்பூர் மக்களிடமும் உலக மக்களிடமும் காட்ட முடியும். ஆனால் வழக்கு விசாரணையின் முதல் நாளன்று நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. எங்களை அவர் வழக்கு ரீதியாக எதிர்க்கவில்லை,” என்று திரு சண்முகமும் டாக்டர் விவியனும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்