தம் தந்தையின் விருப்பத்திற்கு இணங்க எண் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டை உடனடியாக இடிக்க வேண்டும் என்று திரு லீ சியன் யாங் கூறியது தவறானது என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் யூ தமது உயிலில் வீடு இடிக்கப்பட வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தாலும், அது பாதுகாக்கப்படலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
திரு லீ சியன் யாங் சொல்வது தவறு என்பது அவருக்குத் தெரியும் என்றும் சொத்துகளை உடனடியாக இடிப்பதற்காக அவர் ஒரு தவறான அவசரத்தை ஏற்படுத்த முற்படுகிறார் என்றும் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தார்.
“மறுபுறம், தெரிவுகளைக் கருத்தில்கொள்ள (அனைத்து அல்லது சொத்தின் ஒரு பகுதியை இடிப்பது அல்லது பாதுகாத்தல் உட்பட) முற்படும் அரசாங்கம், தற்போதைய சிங்கப்பூரர்களும் எதிர்காலச் சந்ததியினரும் முடிவெடுக்க நேரம் கொடுக்கிறது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான திரு லீ சியன் யாங் அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் லாரன்ஸ் வோங்கைக் கேட்டுக்கொண்டார்.
அவரது பதிவில், தம் சகோதரி டாக்டர் லீ வெய் லிங் ஆக்ஸ்லி சாலை வீட்டில் வசிப்பதை நிறுத்திய உடனேயே வீட்டை இடிக்க வேண்டும் என்று தங்கள் தந்தையின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“இது உங்கள் பொறுப்பு. இது குறித்து சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு ஒன்பது ஆண்டுகள் இருந்தன. இதில் மேலும் தாமதிப்பது நீங்கள் கெளரவப்படுத்துவதாகக் கூறும் லீ குவான் யூவின் கடைசி ஆசையைச் சிதைத்துவிடும். தயவுசெய்து நல்ல முடிவெடுங்கள்,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு எழுதிய கடிதத்தில் திரு லீ சியன் யாங் தெரிவித்திருந்தார்.
2011 டிசம்பர் 27ஆம் தேதி திரு லீ குவான் யூ அமைச்சரவைக்கு எழுதிய கடிதத்தை அரசாங்கம் தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியது. அதில், வீட்டை இடிக்கக் கூடாது என்று அமைச்சரவை உறுப்பினர்கள் ஒருமனதாக கருதியதை காலஞ்சென்ற திரு லீ ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் இதைப் பற்றி யோசித்து, எண் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அதன் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் மற்றும் முழுக் கட்டடத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அது பின்னர் மக்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு காலியான கட்டடம் விரைவில் வீழ்ச்சியடைந்து, சிதைந்துவிடும்,” என்று திரு லீ குவான் யூ எழுதியிருந்தார்.
இந்நிலையில், “திரு லீ சியன் யாங்கின் தொடர் குற்றச்சாட்டுகள் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும்,” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

