சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூவின் 38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை தேசியச் சின்னமாக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பது பற்றி அவரது பிள்ளைகளில் ஒருவரான லீ சியன் யாங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும் என்னும் மறைந்த திரு லீயின் விருப்பத்தை நசுக்க மசெக அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக திங்கட்கிழமை (நவம்பர் 3) இரவு தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
திரு லீயின் வீட்டை இடிக்க இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரிக்கும் வகையில், தேசியச் சின்ன அறிவிப்பு அமைந்திருப்பதாகவும் திரு லீ சியன் யாங் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“மறைந்த திரு லீ தமது முழு வீட்டையும் தனிப்பட்ட ஒன்றாகக் கருதினார். தமது தனிப்பட்ட வீட்டை இடிக்க அவர் கொண்டிருந்த விருப்பத்தை மசெக அரசாங்கம் நசுக்குவதாக முடிவு செய்துள்ளது,” என அவர் கூறியுள்ளார்.
38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக்குவது தொடர்பான அறிவிப்பை திங்கட்கிழமையன்று (நவம்பர் 3) அரசாங்கம் வெளியிட்டது.
திரு லீயின் வீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இடங்கள், நினைவுச்சின்னங்களின் பழமைப் பாதுகாப்பு குறித்த தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆலோசனைக் குழு மதிப்பீடு செய்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பராமரிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டால் அந்த இடத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்று அர்த்தம் எனத் தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
“திரு லீயின் ஆக்ஸ்லி ரோடு வீட்டை அரசாங்கம் எடுத்துக்கொண்டு அதைப் பாதுகாத்துப் பராமரித்தால் அந்த இடம் பொதுமக்களுக்கான இடமாக மாற்றியமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“அது மரபுடைமைப் பூங்காவாக மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அந்த இடம் குடியிருப்பு, வர்த்தகம் அல்லது இதர தனியார் பயன்பாடுகளுக்காக மறுசீரமைக்கப்பட முடியாது,” என தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் கூட்டாகத் தெரிவித்து இருந்தன.

