லண்டன் நகருக்கு லீ குவான் யூ உலக நகரப் பரிசு

லண்டன் நகருக்கு லீ குவான் யூ உலக நகரப் பரிசு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Jun 2026 - 9:25 pm

2 mins read

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது, பரபரப்பான பெருநகரத்திற்கு ஏற்ற உருமாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றுக்கான தனித்துவமான ஆற்றலை அங்கீகரிக்க, லண்டன் நகருக்கு லீ குவான் யூ உலக நகரப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

லண்டன் நகரின் மேயர் சாதிக் கானுக்கு இவ்விருதினைத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் வழங்கினார்.

உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின் அங்கமாக, திங்கட்கிழமை (ஜூன் 15) கேப்பிடோல் தியேட்டர் அரங்கில் இவ்விருதளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அந்நகரின் மேயர் விருதினைப் பெற்றுக்கொண்டார்.

நகர்ப்புறச் சவால்களை எதிர்கொள்வதற்கும், நகர மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதுமையான அணுகுமுறைகளைச் செயல்படுத்தியதற்காக, ஆன்ட்வெர்ப், புடாபெஸ்ட், குவாங்சோ, தைபேய், தியான்ஜின் (Antwerp, Budapest, Guangzhou, Taipei, and Tianjin) ஆகிய நகரங்களும் அங்கீகரிக்கப்பட்டன.

உலக நகரத் தலைவர்களை ஒன்றிணைத்த உச்சநிலைக் கூட்டம்

நகர்ப்புறங்களின் வாழும் தன்மையையும் நீடித்த நிலைத்தன்மைச் சவால்களையும் ஒட்டிய கருத்துகளைப் பகிரும் நோக்கில் உலகத் தலைவர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், நிறுவனத் தலைவர்கள் எனப் பலரையும் உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டம் ஒருங்கிணைத்தது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டத்தின் பத்தாம் ஆண்டில் மொத்தம் 112 நகர மேயர்கள், 263 நகரங்களிலிருந்து 4,200 வருகையாளர்கள் பங்கேற்றனர்.

‘இப்போதே செயல்படுங்கள்!’ எனும் கருப்பொருளில், ஜூன் 14 முதல் 16ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த உச்சநிலைக் கூட்டம் சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மேயர்கள் கருத்தரங்கு, இளம் தலைவர்கள் கருத்தரங்கு, நகரங்களின் அறிவியல் கருத்தரங்கு ஆகியவற்றுடன் தேசியக் கொள்கைகளை நகரச் சூழலில் செயல்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான சமூகங்களுக்கான நகரங்களுக்குப் புத்துயிர் அளித்தல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துரையாடும் அமர்வுகளும் இடம்பெற்றன.

இதனையொட்டி நகரங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக் குறிப்புகளும், உடன்படிக்கைகளும் கையெழுத்தாயின. புதிய திட்டங்களும் அறிமுகம் கண்டன.

இக்கூட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில், அனைத்துலக அளவில் 40க்கும் மேற்பட்ட வழங்குநர்கள், நகர்ப்புறத் தீர்வுகளையொட்டிய புத்தாக்கத் திட்டங்களையும், இருவழித் தொடர்புள்ள கருத்தாய்வுகளையும் படைத்தனர்.

இனி வரும் உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டம் 2028ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறும். உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட மேயர் கருத்தரங்கு, அடுத்த ஆண்டின் பிற்பாதியில் 2024ஆம் ஆண்டு லீ குவான் யூ உலக நகரப் பரிசை வென்ற மெக்சிக்கோ நகரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்