சிங்கப்பூரின் நிறுவனப் பிரதமர் லீ குவான் யூ தனது பணிக்காலத்தில் பயன்படுத்திய வெள்ளி நிற ‘மாண்ட்ப்ளாங்க்’ (Montblanc) ஃபவுண்டன் பேனா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) $461,500க்கு ஏலத்தில் விற்பனையானது.
சிங்கப்பூரின் ‘ஹாட்லாட்ஸ்’ ஏல நிறுவனத்தில் நடைபெற்ற அந்த ஏலத்திற்கு, உலகம் முழுவதுமிருந்து 111 ஏலக் கோரிக்கைகள் வந்திருந்தன.
‘SM Lee Kuan Yew’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் பேனா, ஆகஸ்ட் 4ஆம் தேதி இணையவழி ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலம் முடிவடைந்தபோது, ‘ஹாட்லாட்ஸ்’ நிறுவனம் மதிப்பிட்டிருந்ததைக் காட்டிலும் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக அந்தப் பேனா ஏலத்தில் கேட்கப்பட்டிருந்தது.
முன்னதாக, $30,000 முதல் $50,000 அதன் விலை இருக்கலாம் என ஹாட்லாட்ஸ் கணித்திருந்தது.
அந்தப் பேனா, திரு லீ குவான் யூ 1990 முதல் 2004 வரை மூத்த அமைச்சராக பணியாற்றிய காலத்தைச் சேர்ந்தது.
சிங்கப்பூரின் பிரதமராக 31 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு அவரது நிர்வாகப் பணிக்காலத்தின் அடுத்த கட்டத்தில் அவர் பயன்படுத்திய பேனா அது.
1957ஆம் ஆண்டு லண்டனில் சிங்கப்பூர் அரசியலமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திரு லீ குவான் யூ பயன்படுத்திய கருப்பு நிற ‘வாட்டர்மேன்’ ஃபவுண்டன் பேனா, கடந்த 2003ஆம் ஆண்டு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு தொழிலதிபருக்கு $3,50,000க்கு விற்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம்தான் சிங்கப்பூரின் சுய அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.


