மின்படியில் சிக்கிய சிறுமியின் பாதம்

1 mins read
e274cf42-b8a6-4c07-a273-ef4ab3e9d65f
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில், மின்படியில் இடது பாதம் சிக்கிய நிலையில் சிறுமி ஒருவர் இருப்பதையும் அவருக்கு அருகே பெண் ஒருவர் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது. - படங்கள்: ஃபேஸ்புக்

புவாங்கோக்கில் உள்ள செங்காங் கிராண்ட் கடைத்தொகுதியில் இருக்கும் மின்படியில் சிறுமி ஒருவரின் இடது கால் சிக்கிக்கொண்டது.

சனிக்கிழமை (பிப்ரவரி 22) மாலை நடந்த சம்பவம் குறித்து மாலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மேலும், மீட்புக் கருவியைப் பயன்படுத்தி மின்படியில் சிக்கியிருந்த சிறுமியின் காலை வெளியே எடுத்ததாகவும் அது சொன்னது.

அச்சிறுமி கேகே சிறார், மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில், மின்படியில் பாதம் சிக்கிய நிலையில் சிறுமி ஒருவர் இருப்பதையும் அவருக்கு அருகே பெண் ஒருவர் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது.

அந்தப் பெண் அழுதுகொண்டிருக்கும் அச்சிறுமியைச் சமாதானம் செய்ததையும் அதில் பார்க்கலாம்.

மேலும், அவர்களுக்கு அருகே ஒரு பெண் கைப்பேசி மூலம் அதிகாரிகளை உதவிக்கு அழைப்பதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்