தொலைத்தொடர்பு சாதனங்களைக் கட்டடங்களில் பொருத்த சட்டத் திருத்தம்

தொலைத்தொடர்பு சாதனங்களைக் கட்டடங்களில் பொருத்த சட்டத் திருத்தம்

2 mins read
சிங்கப்பூர் எதிர்காலத்தில் தடையற்ற இணைப்பைப் பெறுவதை உறுதிசெய்யும் திட்டம்
ab9f7eaf-6c6f-4d09-841e-1d44f8809f5e
தொலைத்தொடர்பு சாதனங்களுக்கென வாடகை அற்ற வகையில் கட்டடங்கள் கட்டியெழுப்பப்படும் முன்பே தனியிடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கோருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகவல் மின்னிலக்க அமைச்சு (ஐஎம்டிஏ), கட்டடங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பொருத்துவதற்கான புதிய சட்டத் திருத்தங்களை முன்மொழியவிருக்கிறது.

அதன்படி, கட்டடங்கள் எழுப்புவதற்கு முன்னதாகத் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பொருத்துவதற்கான தனியிடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் அவற்றுக்கு வாடகை வசூலிக்கப்படக்கூடாது.

கட்டட வடிவமைப்புக்குச் செய்யப்படப்போகும் சட்ட திருத்தங்களில் அமைச்சு இந்த மாற்றங்களை முன்மொழியவிருக்கிறது.

வருங்காலத்தில் ஓட்டுநரில்லா வாகனங்களும் மனித இயந்திரங்களும் செயல்படுவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடுகள் அமையும்.

கட்டடங்களின் தகவல் தொடர்பு வசதிகளுக்கான நடைமுறை விதியில் (COPIF) அந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கட்டட வடிவமைப்பாளர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை வைக்க தனியிடங்களை கட்டடங்களின் அடித்தளத்தில் (பேஸ்மன்ட்) உள்ள கார் நிறுத்துமிடங்களில் ஒதுக்கவேண்டும்.

அதன்வழியாக தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் தெளிவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டடத்தின் அடியில் உள்ள கீழ்மாடியில், தொலைத்தொடர்பு சாதனங்களை வைக்க செங்குத்தான மறைவிடங்களையோ அல்லது இரும்புப் பெட்டி வடிவில் மேல் சுவரிலோ இடங்களை ஒதுக்கலாம்.

“தற்போதைய கட்டட தகவல்தொடர்பு நடைமுறை விதியில் மாற்றங்கள் செய்ய அமைச்சு விரும்புகிறது. தொலைபேசிகளுடன் கைப்பேசிகளின் அலைவரிசை ஆகியவற்றின் உள்கட்டமைப்புகளை நிறுவி அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கும் தடையற்ற இணைப்பை சிங்கப்பூர் எதிர்காலத்தில் பெறுவதை உறுதிசெய்யவும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன,” என்று அமைச்சு விளக்கியது.

இதுகுறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல்களையும் அமைச்சு நடத்திவருகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டட உரிமையாளர்களும் கட்டடம் கட்டப்படும் முன்பே சாதனங்களுக்கான தனியிடங்களை ஒதுக்கவேண்டும்.

சாக்கடை, கழிவுநீர், தண்ணீர்க் குழாய், மின்கம்பிகளுக்கு அமைப்பது போலவே திட்ட வரைபடங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் இடங்கள் இருக்கவேண்டும்.

குடியிருப்பாளர்களும், வாடகைதாரர்களும் புதிய இல்லங்களுக்குச் செல்லும் முன்பே, தொலைத்தொடர்புச் சேவைகள் செயல்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியம் என்று அமைச்சு வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்