புளோக் 55 லெங்கோக் பாருவில் ஜூலை 20ஆம் தேதி நடந்த கொலைச் சம்பவத்தில் கைதான 59 வயது ஆடவர், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே வயதான தியாகராஜன் கருணாகரன் என்பவரைக் கொன்றதாக இங் சுவீ செங் மீது ஜூலை 22ல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணியளவில் 16வது மாடி மின்தூக்கி முகப்பில் தியாகராஜன் அசைவின்றி விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குக் கைவிலங்கிடப்பட்டு, கறுப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இங், பல அதிகாரிகளின் பாதுகாப்போடு 16வது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே ஒரு வீட்டு வாசலுக்குச் சென்ற அவர், அங்கு அதிகாரிகளிடம் பேசினார்.
சம்பவ இடத்தில் இரு அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டன. விசாரணைக்குப் பின் காலை 10.15 மணியளவில் இங் மீண்டும் வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காணொளி அழைப்பு வாயிலாக ஜூலை 22ல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இங், சத்தம் எழுந்ததைத் தொடர்ந்து அண்டைவீட்டாருக்கும் தமக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்து இவ்வாறு செய்ததாகக் கூறியிருந்தார்.
சம்பவம் நிகழ்ந்த தினம், இரு ஆடவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தமது கண்காணிப்புப் படக்கருவிக் காட்சிமூலம் பார்த்ததாகக் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.


