சுயதொழில் செய்யும் பெற்றோரில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானோர், 2019க்கும் 2022க்கும் இடையே குழந்தை பராமரிப்பு விடுப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
சுயதொழில் செய்யும் ஏறக்குறைய 31,100 பேர், அரசாங்கம் பணம் தரும் குழந்தைப் பராமரிப்பு விடுப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் தகுதிபெறுகின்றனர். ஆண்டுதோறும் அவர்களில் சராசரியாக 5,400 பேர் அத்தகைய விடுப்புக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
மேலும், நீட்டிக்கப்பட்ட குழந்தைப் பராமரிப்பு விடுப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் 25,300 பேரில் வெறும் 1,400 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
ஏழு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உடைய பொற்றோர் வேலை செய்யும் பட்சத்தில், அரசாங்கச் செலவில் ஆறு நாள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.
ஏழு முதல் 12 வயது வரை பிள்ளைகள் உடையோருக்கு இரண்டு நாள் விடுப்பு கிடைக்கும். சுயதொழில் செய்வோர் இந்த அனுகூலங்களைப் பெற ஆண்டுக்கு முறையே $1,500யும், $1,000 வரையிலும் கோரலாம்.
அரசாங்கம் பணம் தரும் ஒவ்வொரு வகை விடுப்புக்குத் தகுதிபெறும் தன்னுரிமை ஊழியர்கள், சுயதொழில் செய்வோரின் எண்ணிக்கை குறித்தும் அத்தகைய விடுப்புக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை பற்றியும் நியமன எம்.பி. ஜீன் சீ புதன்கிழமை (நவம்பர் 13) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அளித்த எழுத்துபூர்வ பதிலில் இந்த விவரங்கள் பகிரப்பட்டன.
குடும்ப, ஊழியரணி ஆய்வுத் தரவின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் வழங்கப்பட்டதாக திரு மசகோஸ் சொன்னார்.

