விடாமுயற்சியை விரட்டிவந்த வெற்றிக்கனி

2 mins read
2062e9f9-b514-47a2-bdd0-93e00ff18031
அனிஷா டயான் சண்டர்சன். - படம்: அனிஷாவின் பெற்றோர்
ஆட்ரி முகர்ஜி.
ஆட்ரி முகர்ஜி. - படம்: ஆட்ரியின் பெற்றோர்
அயான் அப்துல் ரஹீம்.
அயான் அப்துல் ரஹீம். - படம்: அயானின் பெற்றோர்

தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் (பிஎஸ்எல்இ) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மூவர், தேசியத் தேர்வின் சவால்களை எதிர்கொள்ள தங்களின் பல்வகைப்பட்ட ஆர்வங்கள், வலுவான ஆதரவு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் எவ்வாறு உதவின என்பதைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

தலைமைப் பண்பும் தன்னொழுக்கமும்

குவீன்ஸ்டவுன் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த அனிஷா டயான் சண்டர்சன், தேர்விற்குத் தயாரானதில் தன்னொழுக்கத்தைக் கடைப்பிடித்தார்.

இயல்பாகவே கூச்சம் மிக்கவராக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் வகுப்புத் தலைவராகவும் அணியின் தலைவராகவும் இவர் செயல்பட்டார். எவரது கண்காணிப்புமின்றி தாமாகவே திருத்தங்களைச் செய்வார்; கைப்பேசியில் செலவிடும் நேரத்தையும் குறைத்துக்கொண்டார்.

சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்ஸ்) மீதான அனிஷாவின் ஆர்வம், தேர்விற்கும் ஒழுக்கத்துடன் தயாராகவும் அவருக்கு உதவியது. அத்துடன், பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இவருக்கு நல்லாதரவும் ஊக்கமும் அளித்தனர்.

பள்ளியில் தலைமைத்துவத்திற்காக மும்முறை விருது பெற்ற அனிஷா, வருங்காலத்தில் கால்நடை மருத்துவராக விரும்புகிறார்.

பிறருக்குக் கைகொடுத்ததால் வளர்ந்த தன்னம்பிக்கை

அங் மோ கியோ தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆட்ரி முகர்ஜி, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.

அவர் பள்ளியின் ‘ஆஸ்பைரீடர்ஸ்’ திட்டத்தில் சக மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இணைவாசகராகவும் இருந்தார். இந்த அனுபவம், ‘பொறுமையாக இருந்தால் திறம்பட தேர்வை எதிர்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது.

அவர் தம் பாடத்திட்டத்திற்கு முறையான அணுகுமுறையைப் பயன்படுத்தினார். தம் நண்பர்களுக்கு வழிகாட்டியது போலவே, பாடங்களைச் சிறிய படிகளாகப் பிரித்தார். ஆசிரியர்களும் பெற்றோரும் நண்பர்களும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.

ஆட்ரி ‘அறியப்படாத நாயகர்’ விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் நடிப்புத்துறையில் சாதிப்பதே அவரது கனவு.

தன்னார்வமும் தளரா முயற்சியும்

ஒவேசிஸ் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த அயான் அப்துல் ரஹீம், 2023ஆம் ஆண்டில் ‘ஹெப்படைடஸ்’ எனும் கல்லீரல் அழற்சி நோயுடன் போராடியபோதிலும் கல்வியிலும் காற்பந்து விளையாட்டிலும் சமநிலையைப் பேணினார்.

அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும், அவர் காற்பந்தில் விடாமுயற்சியுடன் உள்ளூர் குழுவான லயன் சிட்டி செய்லர்சில் சேர்ந்தார். அவரது அர்ப்பணிப்பு 2024ல் தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற உதவியது. அவர் பள்ளிக்குச் செல்லாத நாள்களில் ஆசிரியர்கள் துணைப் பாடங்களை வழங்கினர். மேலும் அவரது தந்தை அவருக்குப் படிக்க உதவினார்.

அயான் தனது தந்தையைப் பெருமைப்படுத்துவதை முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் குறிப்பிட்டார். காற்பந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியாகச் செயல்பட்டது. அவரது அர்ப்பணிப்பு பீட்டர் லிம் உதவித்தொகை பெறவும் வழிவகுத்தது.

எதிர்காலத்தில் அயான் ஒரு தொழில்முறை காற்பந்து வீரராக விரும்புகிறார்.

இந்த மூன்று மாணவர்களின் கதைகளும் கல்வி, தனிப்பட்ட ஆர்வம் மற்றும் வலுவான ஆதரவு ஆகியவை எவ்வாறு வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்