வெளிநாட்டுத் திறனாளர்களையும் உள்ளூர்வாசிகளையும் ஒன்றிணைப்பதில் சவால்கள் இருந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து அனைவரையும் அரவணைக்கும் பரந்த மனம் கொண்ட சமுதாயமாக விளங்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த குடிமக்களுக்கும் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற புதிய சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான ஒன்றிணைப்பு இந்திய சமூகத்தில் சவால்மிகுந்த ஒன்றாக இருப்பதாக பிரதமர் என்ற முறையில் தமது இறுதி நேர்காணலில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியிருந்தார். அது குறித்த தமது கருத்துகளையும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் பிரதமராகப் பதவியேற்றபின் கலந்துகொண்ட முதல் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தமிழ் முரசு கேள்வி எழுப்பியது.
ஒருபக்கம் சமூக இணக்கம் வேண்டும் என்பதற்கும் மறுபக்கம் வெளிநாட்டவரை வரவழைப்பதற்கும் இயல்பாக அமையும் பதற்றமே தாம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என பிரதமர் கூறினார்.
இந்திய, சீன சமூகங்கள் குறிப்பாக இந்த ஒன்றிணைப்பு அம்சங்களில் சவால்களை எதிர்நோக்கும் என்றார் அவர்.
இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது வெவ்வேறு பிரிவினரையும் தொடர்ந்து சந்தித்து பேசுவோம். ஆனால் பரந்த மனப்பான்மை கொண்ட அரவணைக்கும் சமுதாயமாக இருப்பதே தொடக்கப் புள்ளியாக இருக்கவேண்டும் என்றார் திரு வோங். இது தொடர்ச்சியான பணி என்றும் அவர் சொன்னார்.
நமது விழுமியங்களையும் நம் வாழ்க்கைப் பாணியையும் பின்பற்ற தயாராக இருப்பவர்களை சிங்கப்பூர் வரவேற்கும் என்று கூறிய திரு வோங், நமக்கென்ற விதிமுறைகள் உண்டு என்பதை வலியுறுத்தினார்.
“எவரேனும் வரலாம் என்பதில்லை. கட்டுப்பாடுகளுடன் அவர்களை வரவழைக்கிறோம். அதே நேரம் சிங்கப்பூரர்களாக பெரிய மனதுடன், பரிவுடன், தாராளமாக சிங்கப்பூர் குடும்பத்தின் ஓர் அங்கமாக அவர்களை வரவேற்க நம் பங்கை ஆற்றவேண்டும்,” என்றார் பிரதமர் வோங். அவ்வப்போது பிரச்சினைகள் எழும் என்பதையும் அவர் கூறினார்.
“புதிய வரவுகளாக வந்தவர்கள் சில காலத்துக்குப் பின், நம் கல்வி முறையில் அவர்களின் பிள்ளைகள் இணைய, அவர்களின் மகன்கள் தேசிய சேவையாற்ற, நம் வாழ்க்கை முறையுடன் ஐக்கியமாகி நம் முன்னோர்களைப் போல அவர்களும் சிங்கப்பூரர்களாகி விடுவர்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
குடிபெயர்ந்தவர்களால் ஆன சமுதாயமாகவும் தேசமாகவும் நாம் கொண்டிருக்கும் குணநலன்களைத் தொடரவேண்டும் என்றும் ஒன்றிணைப்பு அம்சங்களைச் சமாளிக்க தொடர்ந்து முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிங்கப்பூரர்களுடன் பொதுவாகவும் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிப்பட்ட அக்கறைக்குரிய அம்சங்கள் இருப்பதால் குறிப்பிட்ட சமூகங்களுடனும் அவர் அதிகளவில் கலந்துரையாடல்கள் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.