எதிர்க்கட்சியான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி, ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சரிபார்ப்பதைத் தாண்டி ‘மாற்று அரசாங்க’மாகத் திகழ விரும்புவதாக சனிக்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.
அதை நிறைவேற்ற ஒரே சிந்தனையுள்ள எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மின்னிலக்கத் தளத்தை உருவாக்க கட்சி திட்டமிடுகிறது. கொள்கை குறித்த நிலைப்பாட்டை முன்வைக்க altgov.sg என்ற இணையத்தளத்தை கட்சி நிறுவவிருக்கிறது.
“மற்றவர்களிடம் எங்களைக் கூடுதலாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறோம். ஒருவேளை மக்கள் செயல் கட்சி தோல்வியுற்றால் நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஒரு மாற்று அரசாங்கம் கைவசம் இருக்கிறது என்று மக்களுக்குத் தெரியும்,” என்றார் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமன்.
2025 பொதுத் தேர்தல் முடிந்து தொண்டூழியர்களுக்கு நன்றி சொல்ல உபி கிரெசண்ட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பேசிய திரு ஃபிலமன் அவ்வாறு கூறினார்.
“இதுதான் செய்யவேண்டிய பொறுப்பான செயல்,” என்ற அவர், “அரசாங்கத்தை இனி சரிபார்க்க விரும்பவில்லை,” என்றார்.
முன்னோக்கியத் திட்டமிடலையும் சிங்கப்பூரில் அரசியலை அணுகும் முறையையும் மாற்றவேண்டிய கட்டாயம் உள்ளதாக ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி குறிப்பிட்டது.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கட்சியை அடுத்த 10, 15 ஆண்டுகளில் எவ்வாறு மறுவடிவமைப்பது என்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்று அது கூறியது.
மாற்று அரசாங்கத்தை அமைப்பது பற்றி முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி தொடர்புகொண்டுள்ளதா என்ற கேள்விக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அவ்வாறு செய்யவில்லை என்று திரு ஃபிலமன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதைக் கண்டிப்பாக செய்வோம்,” என்றார் அவர்.
ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக், ஹாலந்து - புக்கிட் தீமா, நீ சூன் ஆகிய குழுத்தொகுதிகளிலும் ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியிலும் இவ்வாண்டு பொதுத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி களமிறங்கியது.
இருப்பினும் எந்தத் தொகுதியிலும் அது வெற்றிபெறவில்லை.

