சிங்கப்பூரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது நாட்டின் மிகப் பெரிய தேசிய சாதனைகளில் ஒன்றாகும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
முறையான சூழல் அமையும் பட்சத்தில், மக்கள் நீண்ட காலம் வாழ்வது நாட்டிற்குப் பெரும் சாதகமாக அமையும் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற வெற்றிகரமான மூப்படைதல் குறித்த ஆய்வு மையத்தின் வருடாந்தர கருத்தரங்கைத் தொடங்கிவைத்து ஆற்றிய முதன்மையுரையில் அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
ஒரு சமுதாயத்தில் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 21 விழுக்காட்டை எட்டும்போது அது ‘அதிகம் மூப்படைந்த சமுதாயம்’ என அழைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் 2026ஆம் ஆண்டில் இந்த நிலையை அடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களின் சராசரி உத்தேச ஆயுட்காலம் 83.9 ஆண்டுகளாக இருந்தது. இது உலகிலேயே மிக உயர்ந்த ஆயுட்கால அளவுகளில் ஒன்றாகும்.
சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, பொதுச் சுகாதாரம், பொருளியல் வளர்ச்சி ஆகிய துறைகளில் கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றத்தையே ஆயுட்கால உயர்வு காட்டுகிறது.
அதிக மூப்படைந்த சமுதாயம் என்பது பல ஆண்டுகால அனுபவம், அறிவு, சமூக மூலதனம் ஆகியவற்றைக் கொண்ட மக்களை அதிகம் பெற்ற ஒன்றாகும். அவர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் வரை சமுதாயத்துக்குத் தொடர்ந்து பங்காற்ற முடியும்,” என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.
அதேவேளையில், கூடுதல் ஆயுட்காலம் சுமையாக மாறாமல் நன்மையாக அமைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலத்துக்கும் ஆரோக்கியமான ஆயுட்காலத்ததுக்கும் இடையே ஏறத்தாழ 11 ஆண்டுகள் இடைவெளி உள்ளதாகவும் அமைச்சர் இந்திராணி சுட்டிக்காட்டினார்.
நீண்ட ஆயுளைக் கொண்ட ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் இந்திராணி மூன்று முக்கிய வழிகளை பரிந்துரைத்தார்.
அவற்றில் ஒன்று, நோய் தடுப்பு அணுமுறை, நீண்டகாலப் பராமரிப்பு எளிதில் கிடைப்பது ஆகியவை மூலம் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் மூப்படைவதற்கான அடித்தளத்தைச் சிங்கப்பூர் அமைத்து வருவதாகும்.
‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின் மூலம் நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் மோசமான உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க சிங்கப்பூரர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மூத்தோர் சுறுசுறுப்பாக இயங்க துடிப்புடன் மூப்படைவதற்கான நிலையங்கள் விரிவாக்கப்பட்டு வருகின்றன
இரண்டாவதாக, மூத்தோருக்கு ஏற்புடைய அக்கம் பக்க குடியிருப்பு வட்டாரங்களையும் சுற்றுப்புறங்களையும் சிங்கப்பூர் கட்டி வருகிறது.
மூத்தோருக்கு அவர்களது அன்றாட வாழ்க்கை சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க, துடிப்புடன் மூப்படையும் மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் அவர்களது வீடுகளில் கைப்பிடி, சரிவுப் பாதை, வழுக்கி விழுவதைத் தடுக்க உதவும் சற்று சொரசொரப்பான தரை ஓடுகள் ஆகியவை பொருத்தப்படுகின்றன.
மேலும் சில்வர் மேம்பாட்டுத் திட்டமும் நடப்பில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மனதிற்கு இதமான தோட்டங்கள், தடுப்பு ஏதுமின்றி மூத்தோர் எளிதில் பயன்படுத்தி நடமாட உதவும் சரிவுப் பாதைகள் ஆகியவை கட்டப்படுகின்றன.
மூத்தோருக்கு ஏற்புடைய சாலைப் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் செய்து தரப்படுகின்றன.
மூன்றாவதாக, வாழ்நாள் முழுவதும் மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் இந்திராணி வலியுறுத்தினார். முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்குச் சிறப்பு உதவிகள் வழங்கப்படுவதுடன், 40 வயதுக்கும் மேற்பட்டோரின் வேலைத்திறனை மேம்படுத்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.
