போட்டி மனப்பான்மையைக் குறைத்து மாணவர்களின் வலிமையைக் கொண்டாடுவோம்: டெஸ்மண்ட் லீ

போட்டி மனப்பான்மையைக் குறைத்து மாணவர்களின் வலிமையைக் கொண்டாடுவோம்: டெஸ்மண்ட் லீ

2 mins read
acd3238c-496e-499c-ae29-7a7e46975864
கல்விக் கொள்கைகள் சார்ந்த கருத்துகள், ஆலோசனைகள் ஆகியவற்றைச் சேகரிப்பதற்காக, ‘கல்வி உரையாடல்கள்’ என்ற முயற்சியின்கீழ் நடைபெற்ற முதல் பொதுக் கலந்துரையாடல் அங்கத்தைக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வழிநடத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

கல்வியில் போட்டி மனப்பான்மையிலிருந்து விலகி, ஒவ்வொரு மாணவரின் வலிமையையும் கொண்டாடும் கலாசார மாற்றம், சிங்கப்பூரர்களாகிய நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

கல்விக் கொள்கைகள் சார்ந்த கருத்துகள், ஆலோசனைகள் ஆகியவற்றைச் சேகரிப்பதற்காக, ‘கல்வி உரையாடல்கள்’ என்ற முயற்சியின்கீழ் இந்த முதல் பொதுக் கலந்துரையாடல் அங்கம் சனிக்கிழமை (ஜூன் 27) சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலை வழிநடத்திய திரு லீ, மாணவர்கள் தங்களின் ஆர்வத்தையும் திறமைகளையும் கண்டறிய இதுபோன்ற முயற்சிகள் வழிவகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், “மாணவர்கள் அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக்கொள்ளவும், நல்ல குணநலன்கள் கொண்ட மனிதர்களாக வளரவும் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

கல்வி முறையை மறுபரிசீலனை செய்வதற்கும் கல்வித்துறையில் நடக்கும் போட்டித்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த உரையாடல்கள் அறிமுகம் காணும் என்று திரு லீ கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

இந்த முதல் கலந்துரையாடல் அங்கத்தில் பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 160 பேர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (PSLE) முறையை மறுஆய்வு செய்தல், கல்விசாராத் திறன்களைக் கருத்தில் கொள்ளும் வகையில் பள்ளி நேரடிச் சேர்க்கை முறையைச் சரிசெய்தல், குழந்தைகளுக்குக் கல்விசாராத் திறன்களை வழங்குதல், கல்வியாளர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளுதல் ஆகிய முக்கியக் கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் முன்வைத்தனர்.

பணியிடத்தையும் சமூகத்தையும் மறுவடிவமைத்து வரும் செயற்கை நுண்ணறிவு, மாறிவரும் உலகச் சூழல் போன்றவற்றால் நம் குழந்தைகள் வாழப்போகும் உலகம் நம்முடைய உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்று திரு லீ சுட்டிக்காட்டினார்.

“நம் மாணவர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும் நம்பிக்கையுடன் பேசவும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இவை செயற்கை நுண்ணறிவாலோ தொழில்நுட்பத்தாலோ உருவாக்க முடியாத குணங்களாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பொதுக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒரு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் காண விரும்புவதாகத் திரு டேரல் தெரிவித்தார்.

“உள்ளடக்கம் மட்டுமல்லாமல் அது கற்பிக்கப்படும் முறையும் மாற வேண்டும். அதன்வழி மாணவர்கள் இக்காலத்துக்குப் பொருத்தமானவர்களாக இருப்பதற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்வர்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கல்விகல்வி அமைச்சுடெஸ்மண்ட் லீசிங்கப்பூர்மாணவர்கள்கலந்துரையாடல்