கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மேல்நிலைத் தேர்வுகளுக்கான (A-level) முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வெளியிடப்பட்டன
மொத்தம் 10,889 மாணவர்கள் சென்ற ஆண்டு மேல்நிலைத் தேர்வுகளை எழுதினர். அவர்களில் 10,255 பேர், அதாவது 94.2 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று H2 பாடங்களிலும், பொதுத் தாள் அல்லது கல்வியறிவு, ஆய்வுப் பாடத்திலும் தேர்ச்சி பெற்றனர். இது, முந்தைய மேல்நிலைத் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் பெற்ற தேர்ச்சியுடன் ஒப்பிடத்தக்கது எனக் கூறப்பட்டது.
மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 21 பிற்பகல் 3.15 மணி முதல் மார்ச் 7ஆம் தேதி இரவு 11 மணி வரை சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத் தளம் வழியாகவும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
மேல்நிலைத் தேர்வுகளை எழுதிய மாணவர்களில் 19 வயது நிக்கித்தா சரவணனும் ஒருவர். ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் சிறந்து விளங்கும் நிக்கித்தா, கல்வி அமைச்சின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திட்ட உபகாரச் சம்பளம் பெற்றவர்.
“உயர்நிலைக் கல்வி இணைப்பாட நடவடிக்கையின் மூலம் நான் ‘ஸ்டெம்’ பாடத்துறைகளுக்கு அறிமுகமானேன். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கணினியியல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நெறிமுறை மற்றும் பொறுப்பான பயன்பாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வமுள்ளது,” என்றார் நிக்கித்தா.
தமக்குக் கிடைத்த உபகாரச் சம்பளத்தின் மூலம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) காற்றியக்கவியல் (aerodynamics) மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பை நிக்கித்தா பயன்படுத்திக்கொண்டார். சென்ற ஆண்டு நடைபெற்ற செயற்கைக்கோள் வடிவமைப்புப் போட்டியில் நிக்கித்தா மூன்றாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தொடர்ந்து விரைவாக மாறிவரும் சிங்கப்பூர் மின்னிலக்கச் சூழலுக்கு கணினிப் பொறியியல் கல்வி மூலம் நான் பங்களிக்க விரும்புகிறேன்,” என்றார் நிக்கித்தா.
தொடர்புடைய செய்திகள்
தனியார் மாணவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளைப் பிப்ரவரி 21 பிற்பகல் 3.15 மணியிலிருந்து சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தின் இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.
சிங்பாஸ் கணக்கு இல்லாத மாணவர்கள், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத் தளத்தில் உருவாக்கிய கணக்கைப் பயன்படுத்தி முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிப் பல்கலைக்கழக உபகாரச் சம்பளத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழக இணையத்தளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேல்நிலைத் தேர்வுச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தகவல்கள் குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக இணையத்தளத்தை நாடலாம். கூடுதல் உதவி தேவைப்படுவோர் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் செல்லலாம்.
மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களில் தகுதியுடையோர் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்க விரும்பினால் அவர்கள் கிட்டத்தட்ட 135 பாடப்பிரிவுகளில் இருக்கும் சில பாடத்தொகுதிகளிலிருந்து விலக்கு பெற முடியும்.
இதனால் அம்மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற ஆகும் காலத்தை ஓராண்டு வரை குறைக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நேரடியாக பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் அந்தந்த பலதுறைத் தொழிற்கல்லூரி இணையத்தளங்களில் உள்ளன.
அடுத்தகட்ட கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்கள் www.moe.gov.sg/coursefinder, http://go.gov.sg/mysfpreu இணையத்தளங்களை நாடலாம்.
மேலும், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் அல்லது கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டும் ஆலோசகர்களையும் அணுகலாம்.
https://go.gov.sg/moe-ecg-centre இணையத்தளம் மூலம் மாணவர்கள் கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் சார்ந்த ஆலோசனை அமர்விற்குப் பதிவுசெய்யலாம்.
அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை வாரநாள்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் நிலையம், மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இணையம் அல்லது தொலைபேசி வாயிலாக ஆலோசனைச் சேவைகளை வழங்குகிறது. சனிக்கிழமைகளில் அது காலை 9 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை செயல்படும்.