நூலகப் புத்தகங்கள் அகற்றம்; மன்னிப்பு கேட்டது என்யுஎஸ்

2 mins read
aed438d0-c6c1-432b-b23c-799b27ea5fc4
மே 20ஆம் தேதி மறுசுழற்சி செய்யும் நிறுவனம் ஒன்று பல நூலகப் புத்தகங்களை அதன் ஊழியர்களைக் கொண்டு வாகனத்தில் ஏற்றுவது தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன. - படம்: சமூக ஊடகம்

யேல்-என்யுஎஸ் கல்லூரியிடம் அதிகமாக இருந்த நூலகப் புத்தகங்களை மாணவர்களிடம் கொடுக்காமல் அதை அகற்றியதற்காகச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது செயல்பாட்டு குறைப்பாட்டால் நடந்த தவறு என்று அது குறிப்பிட்டுள்ளது.

மே 20ஆம் தேதி மறுசுழற்சி செய்யும் நிறுவனம் ஒன்று பல நூலகப் புத்தகங்களை அதன் ஊழியர்களைக் கொண்டு வாகனத்தில் ஏற்றுவது தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன.

அதைத் தொடர்ந்து என்யுஎஸ் புதன்கிழமை (மே 21) இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகமாக இருந்த நூலகப் புத்தகங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் யாரிடமும் கொடுக்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அகற்றப்பட்ட புத்தகங்கள்மீது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவோம், ஆனால் இம்முறை தவறிவிட்டோம். தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று இணைப் பேராசிரியர் நெட்டலி பாங் தெரிவித்தார்.

யேல்-என்யுஎஸ் கல்லூரியின் பெரும்பாலான நூலகப் புத்தகங்கள் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் நூலகங்களுக்குத்தான் மாற்றப்படுகிறது என்றார் அவர். நூலகத்தில் உள்ள புத்தகங்களைச் சரியாகப் பராமரிக்கக் கூடுதலாக உள்ள புத்தகங்கள் சீரான இடைவெளிகளில் மற்ற நூலகங்களுக்கு மாற்றப்படும் என்றார் இணைப் பேராசிரியர் பாங்.

“சிலநேரம் கூடுதலாக உள்ள புத்தகங்களை மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இலவசமாக வழங்குவோம். அதன்பின்னர் மீதமுள்ள புத்தகங்களை மறுசுழற்சி செய்ய அனுப்புவோம். இது எல்லா நூலகங்களிலும் செய்யும் நடைமுறை,” என்றார் அவர்.

பெயர் குறிப்பிட விரும்பாத, யேல்-என்யுஸ் முன்னாள் மூத்த நூலகர், நூலகத்தில் 40,000 முதல் 45,000 வரை நூல்கள் இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

இதற்கிடையே, மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்ட 9,000 புத்தகங்களில் 8,500 புத்தகங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்ற 500 புத்தகங்களின் மறுசுழற்சி நடவடிக்கைத் தொடங்கப்பட்டுவிட்டதால் அவற்றை மீட்கவில்லை என்று கூறப்பட்டது.

மேலும் மீட்கப்பட்ட 8,500 புத்தகங்கள் புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்