சிங்கப்பூரின் ஆயுள் காப்புறுதித் துறை இவ்வாண்டு முற்பாதியில் கணிசமான அளவு வளர்ச்சியடைந்தது.
வலுவான பொருளியல் சூழலுக்கு மத்தியில் சொத்துச் சேகரிப்புத் திட்டங்களுக்கான தேவை அதிகரித்திருப்பது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டு முற்பாதியில் சுகாதார, ஆயுள் காப்புறுதித் திட்டங்களின்கீழ் 10.6 பில்லியன் வெள்ளிக்கும் மேலான கோரிக்கைத் தொகையைத் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கியதாக சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தது. காப்புறுதித் திட்டங்களின் காலம் நிறைவடையும்போது வழங்கப்படும் மொத்தத் தொகையும் அதில் அடங்கும்.
அந்தத் தொகை, சென்ற ஆண்டு முற்பாதியில் வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 6.4 பில்லியன் வெள்ளியைவிட அதிகமாகும்.
காப்புறுதி காலம் முடிந்த பிறகு வழங்கப்பட்ட தொகை
இவ்வாண்டு முற்பாதியில் வழங்கப்பட்ட தொகையில் பெரும்பங்கு காப்புறுதித் திட்டங்கள் அவற்றுக்கான காலம் நிறைவடைந்த பிறகு வழங்கப்பட்ட மொத்தத் தொகையாகும். அத்தொகை 8.02 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. இது, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் 50.6 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், தனிநபர்களுக்கான சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களுக்குக்கீழ் நிறுவனங்கள் 1.45 பில்லியன் வெள்ளியை வழங்கின. அத்தொகையில் பெரும்பங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டங்கள் (ஐபி), அவை தொடர்பான துணைக் காப்புறுதித் திட்டங்கள் (ரைடர்) ஆகியவற்றுக்கானது.
இதற்கிடையே, ஆயுள் காப்புறுதித் துறை ஆண்டு அடிப்படையில் 21.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
சுகாதாரப் பராமரிப்பு
சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான பாதுகாப்புக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் நிலவரப்படி சிங்கப்பூர்வாசிகளில் 10ல் ஏழு பேர் ஐபி திட்டங்களின் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர். அவ்விகிதம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களைக் குறிக்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட்ட ஐபி ரைடர் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும் அத்திட்டங்களின் மூலம் பாதுகாக்கப்படுவோரின் எண்ணிக்கை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் மட்டும் சிங்கப்பூர்வாசிகள் கிட்டத்தட்ட 77,000 ரைடர் திட்டங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர்.


