இதயத் துடிப்பைச் சீராக்கி உயிர் காக்கும் கருவி

இதயத் துடிப்பைச் சீராக்கி உயிர் காக்கும் கருவி

2 mins read
d69e42a0-adef-4610-bf1b-bf5ec2cb8c7f
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இதய நிலையத்தின் இதயவியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சியோவ் சுவீ சோங் (இடம்), சிகிச்சை பெற்ற மாணவர் கோயஸ் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோயஸ் லீ  19 வயதில், மாரடைப்புக்கு ஆளாவார் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் செப்டம்பர் 12ஆம் தேதி 20 வயதை எட்டிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) மாணவரான லீ, அவரது முகாமின் மருத்துவ நிலையத்தின் கதவைக் கடந்து உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

“எனது தேசியச் சேவையை நிறைவு செய்துவிட்டதாகக் கருதப்படுவதற்கு முன்னதாகச் செய்யப்படும் கட்டாய இறுதி மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளவே நான் மருத்துவ நிலையத்திற்குச் சென்றிருந்தேன்,” என்று லீ கூறினார்.

நினைவு திரும்பியபோது, மாரடைப்பு ஏற்பட்டது அவருக்குத் தெரியவில்லை.

“எனக்கு தலை சுற்றியது. எனது இரண்டு முன் பற்களையும் காணவில்லை. நான் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு மயங்கிவிட்டதாகவே நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இதய நிலையத்தின் இதயவியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சியோவ் சுவீ சோங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசினார்.

அவசரகால உயிர் காக்கும் சிகிச்சையை வழங்க மருத்துவ உதவியாளர்கள் அங்கு உடனிருந்ததால் நல்ல வேளையாக லீ பிழைத்ததாக அவர் சொன்னார்.

“குறிப்பிடத்தக்க நரம்பியல் பாதிப்பு ஏதுமின்றி அவர் உயிர் பிழைத்தார்,” என்று டாக்டர் சியோவ் கூறினார்.

லீ தனது முகாமிற்கு அருகில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குத்தான் முதலில் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிறப்புச் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

லீக்கு மீண்டும் திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, டாக்டர் சியோவும் அவரது குழுவினரும் ‘டிஃபிப்ரிலேட்டர்’ எனும் இதயத் துடிப்பைச் சீராக்கும் புதிய தலைமுறை சாதனத்தை அவரது நெஞ்செலும்புக்குக் கீழ்ப்பகுதியில், இதயத்திற்கு வெளியே பொருத்த முடிவு செய்தனர்.

அந்தப் புதிய சாதனம் ‘எக்ஸ்ட்ராவேஸ்குலர் இம்ப்ளான்டபிள் கார்டியோவர்ட்டர்-டிஃபிப்ரிலேட்டர்’ என்று வழங்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு மாணவர் லீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

லீ இளையர் என்பதால், சிங்கப்பூரில் இந்தச் சாதனத்தைப் பெற்ற முதல் நோயாளிகளில் இவரும் ஒருவரானார்.

இந்தச் சாதனம், இதயத்துக்கும் நரம்புகளுக்கும் வெளியே வைக்கப்படும் மெல்லிய கம்பியைப் பயன்படுத்தி உயிர் காக்கும் மின் அதிர்வுகளை இதயத் தசைக்கு அனுப்புகிறது.

ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வெளியே திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சம்பவங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பொது இடங்கள் அல்லது வீடுகளில் நிகழ்கின்றன.

இருப்பினும் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 35 வயதுக்கு உட்பட்டோரிடையே திடீர் மாரடைப்பால் மரணம் ஏற்படுவது சிங்கப்பூரில் அரிதான ஒன்று; இது இதயப் பிரச்சினைகளால் நிகழும் மரணங்களில் 3 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது.

குறிப்புச் சொற்கள்
கருவிஇதயம்சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்மாணவர்மாணவிஉட்லண்ட்ஸ்மருத்துவமனைசுகாதார அமைச்சு