முக்கிய தங்க வர்த்தக மையமாக விளங்கவேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
அதற்கு மெருகூட்டும் வகையில் டிபிஎஸ் வங்கி அதன் உலோகக் கட்டிகளுக்கான கொள்ளளவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளும் அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சொத்து நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரிடையேயும் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், உலோகங்களுக்கான அதன் கொள்ளளவை அதிகரித்துள்ளது. புளூம்பர்க் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விக்கு டிபிஎஸ் புதன்கிழமை (செப்டம்பர் 16) மின்னஞ்சல்வழி பதிலளித்தது.
அதேபோல் ஓசிபிசி வங்கியும் உலோகங்களுக்கான தங்களின் கொள்ளளவை அதிகரிப்பது குறித்து அச்சேவையை வழங்கும் நிறுவனங்களை நாடியிருக்கிறது. இதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
டோய்ட்ஷ வங்கியும் உலோகக் கொள்ளளவை அதிகரிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக வேறொருவர் சொன்னார்.
தங்க வர்த்தகத்துக்கு மையமாக விளங்கும் இலக்கு தொடர்பில் தங்க வர்த்தகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் முறையை (gold clearing system) உருவாக்க சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. அந்த வகையில், உலோகக் கொள்ளளவு அதிகரிக்கப்படுவது முக்கிய நடவடிக்கையாக விளங்குகிறது.
தங்கப் பரிவர்த்தனைகளைக் கையாளும் எல்லா வங்கிகளிடையேயும் பெரிய அளவிலான தங்கக் கட்டிகளைச் சேர்த்து வைக்கப் போதுமான கொள்ளளவு இருப்பது அவசியமாகும்.
