மரின் பரேட் ரோட்டில் கூட்டுரிமை வீடுகள் கொண்ட கட்டடம் ஒன்றில் 12 நாள்களாக இரண்டு மின்தூக்கிகளும் இயங்கவில்லை.
‘நெப்டியூன் கோர்ட்’ வளாகத்தில் அமைந்துள்ள புளோக் 2ல் குடியிருப்போர், தினமும் பலநூறுப் படிகளை ஏறி இறங்க வேண்டியுள்ளதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.
கூட்டுரிமைக் கட்டடத்தில் மொத்தம் 21 மாடிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த நவம்பர் முதல் ஒரு மின்தூக்கி பழுதானதாகவும் ஜனவரி 14ஆம் தேதி மற்றொரு மின்தூக்கியும் இயங்காமல் போனதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மின்தூக்கி ஜனவரி 21ஆம் தேதிக்குள் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்னமும் அது பழுதான நிலையிலேயே உள்ளதாக அந்தக் குடியிருப்பாளர் தெரிவித்தார்.
பலமுறை சோதனைக்கும் பழுதுபார்ப்புக்கும் அனுப்பப்பட்ட மின்தூக்கிப் பாகங்களில் பிரச்சினை இருப்பதால் இந்தத் தாமதம் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
பழுதுபார்ப்புப் பணிகள் ஐந்து நாள்களில் முடிந்துவிடும் என்று கூறப்பட்டதை அடுத்து, சுமார் 25 ஆண்டுப் பழைமையான அந்த மின்தூக்கிகள் குறித்து குடியிருப்பாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
அவற்றுக்கான மாற்றுப் பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கலாம் என்றும் பழுதுபார்ப்பு மேலும் தாமதமாகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கடலுக்கு அருகே கட்டடம் இருப்பதால் பாகங்கள் துருப்பிடித்து சேதமடையும் சாத்தியம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், 20வது மாடியில் வசிக்கும் 70 வயது ஆடவர், தாம் தினமும் சுமார் 400 படிகளை ஏறி இறங்குவதாகவும் வீட்டை அடையவே சுமார் 20 நிமிடங்கள் ஆவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 21வது மாடியில் குடியிருக்கும் மூத்தோர் இருவர், சக்கர நாற்காலிப் பயனாளர்கள். அவர்கள் கடந்த 12 நாள்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
உணவுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் அவர்கள் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதிலும், இருவரில் ஒருவர் மருந்துக்காக மருத்துவமனைக்கு வாரந்தோறும் செல்ல வேண்டும்.
மாடிப்படி ஏறும் சக்கர நாற்காலி உள்பட நடமாட்டத்திற்கு உதவி வழங்கப்படுவதாகக் குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிகளில் ஏறும்போது ஆங்காங்கே நாற்காலிகளும் இளைப்பாற வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சீனப் புத்தாண்டுகாலத்தில் இத்தகைய நிலைமை நீடிப்பது குறித்து குடியிருப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.