புலாவ் உபின் அருகில் மின்னல் தாக்கி மீன் பண்ணையில் தீ

புலாவ் உபின் அருகில் மின்னல் தாக்கி மீன் பண்ணையில் தீ

2 mins read
9da53ee3-bff3-4f78-bd67-8ee20fb83521
புலாவ் உபின் குடியிருப்பாளர்கள் வழங்கிய காணொளிகளில், மிதக்கும் மீன் பண்ணை ஒன்று தீப்பற்றி எரிவதைக் காண முடிந்தது. - படம்: மதர்ஷிப்

புலாவ் உபினுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் மிதக்கும் மீன் பண்ணை ஒன்று புதன்கிழமை (ஜூன் 24) இரவு தீப்பிடித்து எரிந்தது.

மின்னல் தாக்கியதால் அந்தப் பகுதியில் உள்ள மீன்பிடிப் படகுகளில் தீப்பற்றியதாக ‘8வோர்ல்ட்’ தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குறைந்தது இரண்டு மிதக்கும் மீன் பண்ணைகளுக்குத் தீ பரவியதாகக் கூறப்பட்டது. அந்தச் சம்பவத்தால் மிகுதியான நிதி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குத் தீப்பற்றி எரிந்தது. தீயை அணைப்பதற்காக, நான்கு காவல்துறைப் படகுகள், இரண்டு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கப்பல்கள், ஓர் இழுவைப் படகு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீச்சம்பவம் நேர்ந்தபோது, பாதிக்கப்பட்ட பண்ணையில் யாரும் இல்லை என்று ‘8வோர்ல்ட்’ கூறியது. அருகில் உள்ள மீன் பண்ணைகளில் இருந்த ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த உதவியதாகவும் அது தெரிவித்தது.

குறைந்தது இரண்டு மீன் பண்ணைகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடத்தக்க அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் மீன் பண்ணையாளர்கள் சங்கம் கூறியது.

பாதிக்கப்பட்ட மீன் பண்ணைகளின் உரிமையாளர்களைச் சந்தித்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் டேனியல் டே தெரிவித்தார்.

புலாவ் உபின் குடியிருப்பாளர்கள் வழங்கிய காணொளிகளில், மிதக்கும் மீன் பண்ணை ஒன்று தீப்பற்றி எரிவதைக் காண முடிந்தது. அவசரப் படகு ஒன்று தொலைவிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தீச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்