சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவரான லிம் மிங் யான், ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து சாங்கி விமான நிலையக் குழுமத்தின் (சிஏஜி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2025, ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிஏஜி-யின் தற்போதைய தலைவரான திரு டான் கீ பாவ்விடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்வார். திரு டான் அந்தப் பதவியை, 2020 அக்டோபர் மாதத்திலிருந்து வகித்து வருகிறார்.
தி எஸ்பிளனேட் கலையரங்கத்தின் தலைவராகவும் உள்ள திரு லிம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினர், செம்பவாங் இன்டஸ்டிரிஸ் நிறுவனம், டிஎஃப்எல் சைபர் சிட்டி டிவலப்பர்ஸ், சைனா வான்கே ஆகியவற்றின் நிர்வாகமற்ற இயக்குநர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.
மேலும் திரு லிம், மோரிஷியஸ் குடியரசுக்கான சிங்கப்பூர்த் தூதராகவும் செயல்படுகிறார்.
முன்னதாக, ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பின் தலைவராகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும் திரு லிம் பொறுப்பு வகித்தார்.
“பெரிய அளவிலான திட்ட மேம்பாடுகளில் மிகுந்த அனுபவம், வலுவான தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில், சாங்கி விமான நிலையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை, 5வது முனையத்தை நிர்மாணிப்பதன் மூலம் சாங்கி விமான நிலையக் குழுமத்தை வழிநடத்துவதற்கு திரு லிம் சிறந்த நிலையில் உள்ளார்,” என்று நிதியமைச்சு தெரிவித்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சிறந்த முறையில் பதவிப் பரிமாற்றம் நடைபெறுவதில் உதவ, திரு டான் தொடர்ந்து சிஏஜி இயக்குநர் சபையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. திரு டான், 2017 மே மாதம் சிஏஜி இயக்குநர் சபையில் சேர்ந்தார்.

