வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான லிம் தியென் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஜோகூர் பாருவில் கைதுசெய்யப்பட்டார்.
மலேசிய அரசுக் காவற்படை அவரைக் கைதுசெய்தது. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் லிம் சரணடையத் தவறியதால் கைதாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
செல்லுபடியாகும் ஆவணமின்றி வழக்கறிஞராகப் பணியாற்றியதற்காக லிம்முக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையைத் தொடங்க அவர் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) சரணடையவேண்டியிருந்தது. அதே நாள் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
சட்டத் தொழில் சட்டத்தின்கீழ், சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணித் தலைமைச் செயலாளரான லிம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிரூபிக்கப்பட்டன. அதனையடுத்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் மாவட்ட நீதிபதி ஒருவர் அவருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனையும் 1,000 வெள்ளி அபராதமும் விதித்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேவேளை, லிம்முக்கு ஐந்திலிருந்து எட்டு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்துக்குக் கடுமையான கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம், அரசுத் தரப்பு மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு லிம்மின் சிறைத்தண்டனையை மூன்று மாதங்கள் ஒரு வாரமாக உயர்த்தியது.
பிறகு தனது சட்டச் சேவைகளை நாடிவந்த ஒருவர் தந்த 30,000 வெள்ளி மதிப்பிலான காசோலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக லிம், கடந்த ஏப்ரல் மாதம் மறுபடியும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.


