செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் 2021ஆம் ஆண்டில் இரண்டு மாதக் காலத்துக்கு வழக்கறிஞராகப் பணியாற்றியதற்காக, வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான லிம் தியெனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) அதிகரித்துள்ளது.
வழக்கறிஞர் தொழில் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 61 வயது லிம் தியெனுக்கு 2025 பிப்ரவரியில் மாவட்ட நீதிபதி ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதித்திருந்தார்.
இந்தத் தண்டனைக்கு எதிராக லிம் தியென் மேல்முறையீடு செய்திருந்தார், அதே வேளையில், அரசுத் தரப்பு அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், லிம் தியெனின் சிறைத் தண்டனையை நீதிபதி கண்ணன் ரமேஷ் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) மூன்று மாதங்கள், ஒரு வாரம் என அதிகரித்தார்.
மேல்முறையீட்டு மனுவின்போது லிம் தியென் சார்பில் வழக்கறிஞர்கள் பேட்ரிக் ஃபெர்னாண்டசும் முகம்மது அர்ஷாத்தும் முன்னிலையாயினர். லிம் தியென் தமது தண்டனையைத் தள்ளிப்போடக் கோரிய விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
தம் கட்சிக்காரர் இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் நிலுவையில் உள்ள மற்றொரு குற்றவியல் வழக்கில் கட்சிக்காரர் ஒருவருக்காக அவர் வாதிட வேண்டியுள்ளதாகவும் வழக்கறிஞர் அர்ஷாத் தெரிவித்தார்.
ஏப்ரல் 24ஆம் தேதி லிம் தியென் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

