‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருள் அகற்றம்: ‘காற்றுச் சுத்திகரிப்பான்கள் பயன் குறித்து குறைவான தரவுகளே உள்ளன’

2 mins read
70d5d679-92cb-4691-8487-49bd00323583
‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருளை அகற்றுவதற்காக காற்றுச் சுத்திகரிப்பானைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருளை அகற்றுவதில் காற்றுச் சுத்திகரிப்பான்கள் பயனுள்ளவையா என்பது குறித்து குறைவான தரவுகளே உள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய வீட்டில் இருக்கக்கூடிய ‘வாடை’ அந்த வேதிப்பொருளால் ஏற்படுகிறது.

‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருளை அகற்றுவதற்காக காற்றுச் சுத்திகரிப்பானைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்கள் முதலில் சுற்றுப்புறத்துக்கு உகந்த கட்டுமானப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வேதிப்பொருளை நீக்க இடுக்கமான பகுதிகளைக் காற்றோட்டமாக்க வேண்டும் என்றும் அது கூறியது.

காற்றுச் சுத்திகரிப்பான்கள் ‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருளை அகற்றக்கூடும் என்று நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளபோதும், பல வீடுகளுக்கு அவை எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்பது பற்றி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெவ்வேறு நிறுவனங்கள் தங்களின் காற்று சுத்திகரிப்பான்கள் அந்த வேதிப்பொருளை அகற்றக்கூடும் என்று வெளியிட்டுள்ள விளம்பரங்கள் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்களும் வாரியமும் பதில் அளித்தன.

‘சியாவ்மி’, ‘டைசன்’, ‘பிளாஸ்மா சைன்ஸ்’, ஸ்டெரா’ உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் அவற்றில் அடங்கும்.

“வேதிப்பொருள்களை அகற்றுவதில் காற்றுச் சுத்திகரிப்பான்களின் பயன் குறித்து தற்போது குறைவான தரவுகளே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சிங்கப்பூர் பசுமைக் குறியீட்டுத் திட்டம் அல்லது சிங்கப்பூர் பசுமைக் கட்டுமானப் பொருள் சான்றிதழ்த் திட்டத்தின்கீழ் சான்றிதழைப் பெற்ற கட்டுமானப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று வாரியம் ஆலோசனை வழங்கியது.

செப்டம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி, ‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருளை அகற்றக்கூடிய காற்றுச் சுத்திகரிப்பான்கள் பற்றிய விளம்பரங்களின் தொடர்பில் எந்தவொரு புகாரும் வரவில்லை என்று வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்