சிங்கப்பூரின் மணி விழா, லிஷாவின் வெள்ளி விழாக் கொண்டாடங்களையொட்டி இந்த ஆண்டு லிட்டில் இந்தியாவில் பொங்கல் முப்பெரும் விழாவாகக் களைகட்ட உள்ளது.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா இந்த ஆண்டு ஏராளமான நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தையொட்டி, பல இனங்களைச் சேர்ந்த 60 குடும்பங்கள் இணைந்து பொங்கல் வைக்க உள்ளன.
ஜாமியா தாதிமை இல்லம், ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்புகளைச் சேர்ந்த மூத்தோருக்கு பொங்கல் அன்பளிப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார் பொங்கல் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷைக் ஃபக்ருதீன்.
பொங்கல் ஒளியூட்டு, கால்நடைகளைக் காட்சிப்படுத்துதல், மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் என ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சிகளுடன் இளையர்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பதினான்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வேளாண் மரபைக் கொண்டாடும் பொங்கலின் வளமான பாரம்பரியக் கூறுகளை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தவும் அவை தொடர்பான நிகழ்ச்சிகளில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் ‘பொங்கல் அனுபவங்கள்’ நிகழ்ச்சி ஜனவரி 13 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெறும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுப்புற, பாரம்பரியக் கலைஞர்களின் பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும் இடம்பெறும்.
கடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற ‘பிக் பஸ் டூர்’ எனும் ‘திறந்த பேருந்தில் வலம்வருதல்’ அங்கம் பொதுமக்களிடையிலும் சுற்றுப்பயணிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றதையடுத்து, பொங்கல் விழாவிலும் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டிமன்றம் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
இளையர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை இளையர்களே வடிவமைத்தால் சிறப்பாக அமையும் என்பதால் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாண்டு நிகழ்ச்சிகளை நடத்தத் துணைநிற்பதாகக் கூறினார் லிஷா அமைப்பின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி.
கடந்த காலங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் வண்ணமயமாக அமைந்ததையும் அப்போது சிறுவர்களாகவும் இளையர்களாகவும் தாங்கள் கொண்டாடி மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார் ஜோதி ஸ்டோர்ஸ் உரிமையாளரும் லிஷா அமைப்பின் மூத்த ஆலோசகருமான ராஜ்குமார் சந்திரா.
இப்போதுள்ள இளையர்கள் மரபுசார்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகக் கூறியதுடன் இது இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
தொடர்ந்து, லிஷா அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் அதற்கான நுழைவுச் சீட்டுகளுக்குப் முன்பதிவு செய்யவும் ஏதுவாக ‘லிஷா’ அமைப்பின் செயலி ஜனவரி 8ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

