தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படாது: சிம் ஆன்

தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படாது: சிம் ஆன்

2 mins read
65bee381-b560-4cbb-85df-911895c4e7fa
உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன், ஏப்ரல் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கக்கூடியதாகக் கருதப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிடாது என்று உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க விவகாரங்களின் தொடர்பில் தனிநபர்கள், நிறுவனங்களின் பட்டியலை அது வெளியிடுவதை அவர் சுட்டினார். ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிமின் கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

அந்தப் பட்டியலை வெளியிடுமாறு திருவாட்டி ஹஸ்லினா கேட்டிருந்தார். மேலும், அத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகள் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு, மறுஆய்வு செய்யப்படுகின்றனவா என்றும் அவர் வினா எழுப்பியிருந்தார்.

இஸ்‌ரேலிய ராணுவத்துடன் தொடர்புடைய அமைப்பில் சிங்கப்பூரர்கள் இருவர் தொண்டூழியம் செய்ததாக வெளியான அறிக்கை பலரின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ‘சர்-எல் வாலன்டியர் கார்ப்ஸ்’ எனும் நிறுவனத்தில் சிங்கப்பூரர் இருவர் 2016ஆம் ஆண்டு தொண்டூழியம் செய்ததாகத் தகவல் வெளியானது. அவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று முடிவுசெய்யப்பட்டதால் அவ்விருவர்மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

வெளியுறவு மூத்த துணையமைச்சருமான திருவாட்டி சிம் ஆன், பாதுகாப்பு மிரட்டல்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகள் வழக்கமான இடைவெளியில் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்கள் விடுக்கும் பாதுகாப்பு மிரட்டல்களும் அவற்றில் அடங்கும்.

“மேலும், சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் ஆயுதமேந்திய சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது என்று பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். வெளிநாட்டு ராணுவங்கள், பாதுகாப்பு அமைப்புகள், உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்து வெகு கவனமாக இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியுள்ளோம்,” என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்