தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோர் இனி பொதுமக்கள் முன் அங்கேயே துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
குப்பை போடுவோரைக் கண்காணிக்கக் கடந்த மாதத்திலிருந்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அமலாக்க அதிகாரிகளும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த இருக்கின்றனர்.
தேக்கா நிலையத்தில் தூய்மையை வலியுறுத்த ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பொது அறிவிப்புகள் ஒலிபரப்பப்படும்.
அவை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 முதல் இரவு 7 மணி வரை ஒலிபரப்பாகும்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான ஆல்வின் டான் புதிய நடைமுறைகளை மார்ச் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேக்கா நிலையத்தில் அறிவித்தார்.
இவ்வாண்டில் இதுவரை குப்பை போடும் குற்றங்களுக்காக தேக்கா நிலையத்தில் ஏறக்குறைய 200 பேர் பிடிபட்டனர். அத்தகையோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார் திரு டான்.
தேக்காவைச் சுத்தமாக வைத்திருக்க ‘அவர் மைகிரண்ட்ஸ் கேஸ்ட்ஸ்’ (Our Migrant Guests) பணிக்குழு புதிய ‘தேக்கா கிளீன்’ தூதர் முயற்சியையும் அறிமுகம் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பணிக்குழு தொடங்கிய முயற்சியில் மார்ச் 9ஆம் தேதி ஏறக்குறைய 50 வெளிநாட்டு ஊழியர்கள் தூதர்களாக இணைந்தனர்.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, பொதுச் சுகாதார மன்றம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேக்கா குடியிருப்பாளர்க் குழு, ரோச்சோர் காவல்துறை, கண்டாங் கர்பாவ் சந்தை வணிகர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் தேக்கா நிலையத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்படி மக்களிடம் வலியுறுத்தின.
தேக்கா நிலையத்தைத் தூய்மையாக வைத்திருந்தால்தான் அது அனைவரையும் வரவேற்கும் இடமாக நீடிக்கும் என்றார் அமைச்சர் டான்.
சாப்பிட்ட தட்டுகள், பானங்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டுச் செல்பவர்களுக்கு முதல் முறை எழுத்துவடிவிலான எச்சரிக்கை வழங்கப்படுகிறது. திருந்தாமல் மறுபடியும் குற்றம் புரிபவர்களுக்கு அபராதம், சீர்திருத்தப் பணி ஆணை முதலானவை வழங்கப்படுகின்றன.
சீர்திருத்தப் பணி ஆணை விதிக்கப்படுவோர், பொது இடங்களில் மூன்று மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரைத் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளவேண்டும்.

