குப்பை போடுவோர் மறுபடியும் அதே குற்றத்தைப் புரிந்தால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி, வர்த்தகத் தொழில்துறை ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான துணை அமைச்சர் டான், சீர்திருத்தப் பணி ஆணையைச் (Corrective Work Order) சிலர் தேக்கா நிலையத்தில் நிறைவேற்றிக் கொண்டிருந்ததைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இந்தத் தண்டனை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நிறைவேற்றப்பட்டது. இம்முறை கிட்டத்தட்ட அறுவர் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றினர். தேக்கா சந்தையிலும் சுற்றுவளாகத்திலும் அவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டில் 12 பேர் தேக்கா வட்டாரத்தில் இந்தத் தண்டனையை நிறைவேற்றினர்.
குப்பை போடுவது குற்றமாகும். குப்பைத் தொட்டி அல்லது குப்பைகளை இடுவதற்காக வழங்கப்பட்ட பிற கொள்கலன்களைத் தவிர, பொது இடங்களில் தூசி, அழுக்கு, காகிதம், சாம்பல், போத்தல், கண்ணாடி, உணவுப் பொருள் உள்ளிட்டவற்றைக் கீழே விடுவதோ வீசுவதோ தண்டனைக்குரிய செயல்களாகும்.
அதேபோல, பொது இடங்களில் உமிழ்வதும் சளியை வெளியேற்றுவதும் குற்றமாகும் என்று சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டம் (Environmental Public Health Act) குறிப்பிடுகிறது.
தரையில் குப்பை போடுவோருக்கு முதன்முறை 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது. மறுபடியும் குற்றம் புரிவோருக்கு நீதிமன்றத்தில் அபராதமும் சீர்திருத்தப் பணி ஆணையும் விதிக்கப்படலாம்.

