‘பிக்கல்பால்’ மைதானங்களாக மாறிய லிட்டில் இந்தியா பேருந்து முனையம்

‘பிக்கல்பால்’ மைதானங்களாக மாறிய லிட்டில் இந்தியா பேருந்து முனையம்

2 mins read
6d7c1957-894b-4070-87c5-35e658139a75
புதுப்பிக்கப்பட்ட லிட்டில் இந்தியா பேருந்து முனையத்தில் எட்டு ‘பிக்கல்பால்’ மைதானங்கள் திறக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செய்தி: ரீமா டுடெகுலா

லிட்டில் இந்தியா பேருந்து முனையத்தில் கூரையிடப்பட்ட காத்திருப்புப் பகுதி ஒன்று, புதிய சமூக விளையாட்டு இடமாக உருமாற்றம் கண்டுள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்ட ‘ஆக்டிவ்எஸ்ஜி கோர்ட்ஸ் @ ஃபேரர் பார்க்’ வசதியில், எட்டு ‘பிக்கல்பால்’ மைதானங்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய வளர்ச்சி, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் சனிக்கிழமை (மார்ச் 14) அந்த வசதியை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

விளையாட்டு வசதிகளுக்கான சிங்கப்பூரின் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய, அதிகம் பயன்படுத்தப்படாத நகர்ப்புற இடங்கள் எவ்வாறு மறுபயன்பாட்டுக்காக மாற்றப்படலாம் என்பதை அவர் கோடிகாட்டினார்.

விளையாட்டுக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதி அந்தத் திட்டம்.

சிங்கப்பூர் முழுவதும் அடுத்த ஐந்தாண்டுகளில் பூப்பந்து, ‘பிக்கல்பால்’ விளையாட்டுகளுக்குக் கூடுதலாக 50 பல்நோக்கு விளையாட்டு மைதானங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் குறித்து இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கூறியிருந்தது.

லிட்டில் இந்தியா பேருந்து முனையம் வெளிநாட்டு ஊழியர்ப் போக்குவரத்துச் சேவைகளுக்காக வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தப்பட்டது. எஞ்சிய நாள்களில், அது பயன்படுத்தப்படுவதில்லை.

“ஸ்போர்ட்எஸ்ஜி, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான நல்ல ஒருங்கிணைப்பின்மூலம், இந்த இடத்தை விளையாட்டுக்காகத் திறக்க முடிவுசெய்தோம்,” என்று திரு டான் கூறினார்.

“அடுத்த வாரம் மைதானங்களுக்கான முன்பதிவு திறக்கும்போது, நாம் இருவரும் இங்கு வந்து விளையாடவேண்டும் என்று எனது தந்தை கூறினார். நான் கண்டிப்பாக வருவேன்,” என்று அஃப்ரா ஃபர்வீன், 25, கூறினார்.

“நான் பஃப்ளோ ரோட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகிறேன். முன்னதாக, ஃபேரர் பார்க் திடல் இருந்தபோது, நாங்கள் குடும்பத்துடன் அங்குச் சென்று உடற்பயிற்சி செய்வோம். இப்போது புதிய மைதானங்கள் திறக்கப்பட்டிருப்பதால், இது ஒரு புதிய அனுபவம். இவ்விளையாட்டை நான் விளையாடியதில்லை. இனி, குடும்பத்துடன் சேர்ந்து விளையாடத் திட்டமிடுகிறோம்,” என்று அங்கயர்கன்னி பாலன், 72, கூறினார்.

விளையாட்டு மைதானங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமைவரை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும். ‘மைஆக்டிவ்எஸ்ஜி’ செயலி மூலம் அவற்றுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். அவை மார்ச் 16ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

குறிப்புச் சொற்கள்