எண் 1, இந்து ரோட்டில் ஆடவர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் மாண்டது குறித்துச் சனிக்கிழமை (மே 17) காலை 8.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் அந்த 43 வயது ஆடவர் அசைவின்றித் தரையில் விழுந்து கிடந்தார் என்றும் அந்த இடத்திலேயே அவர் மாண்டதாக அறியப்பட்டது என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் சூது ஏதும் நடந்ததாகச் சந்தேகிக்கப்படவில்லையென முதற்கட்ட விசாரணை வெளிப்படுத்தியதாகவும் அது சொன்னது.
“இந்து சாலையில் உதவி தேவைப்படுகிறது என எங்களுக்கு மே 17ஆம் தேதி காலை 8.15 மணியளவில் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர்நீத்ததாக எங்கள் துணை மருத்துவப்படை அதிகாரி அறிவித்தார்,” எனச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத இருவர், தாங்கள் கண்டதைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
“நள்ளிரவில் நான் இந்து சாலையிலிருந்து கிளம்பியபோது யாரும் அங்கில்லை. அதனால் அதிகாலையில்தான் அந்த ஆடவர் அங்கு வந்திருப்பாரென நினைக்கிறேன். அவருக்கு அருகே ஒரு தண்ணீர்ப் புட்டியும் ஒரு பையும்தான் இருந்தன,” என்றார் அவர்களில் ஒருவர்.
காலை முதல் பிற்பகல் கிட்டத்தட்ட 1 மணிவரை காவல்துறையினர் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக மற்றொருவர் கூறினார்.
“இறந்த ஆடவரைப் பார்ப்பதற்கு இந்தியர் அல்லது சீனர்போலத் தெரியவில்லை. மலாய்க்காரர் அல்லது பர்மா நாட்டவர் என நினைக்கிறேன். காவல்துறையினர் வருவதற்குள் ஆடவரின் உடல் உறைந்துவிட்டது. அவர் சாலையோரத்தில் படுத்திருந்தபடியே இறந்திருக்கலாம் என்றும் பின்பு சாலையில் அப்படியே உருண்டிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

