அண்மையில் லிட்டில் இந்தியாவில் மூண்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆடவர் ஒருவரைத் தாக்கியதாக 20 வயது பிரதேவ் சசி குமார், 22 வயது கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த் ஆகிய இருவர் மீது செப்டம்பர் 30ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டை 22 வயது முகம்மது சஜித் சலீம் எதிர்நோக்குகிறார்.
செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் வெர்டன் சாலையில் உள்ள கிம் சாம் லெங் காப்பிக்கடையில் 25 வயது திரு தினேஷ் வசியை அந்த மூவரும் நாற்காலியைப் பயன்படுத்தி அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திரு தினேஷை அவர்கள் நாற்காலியால் அடித்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் திரு தினேஷைக் கொன்றதாக சஜித் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது சதீஷ் ஜேசன் பிரபாஸ் மீது செப்டம்பர் 30ஆம் தேதியன்று தாக்குதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
சதீஷ், சஜித், கிர்த்திக் ஆகிய மூவரும் அதே நாள் காலை சாம் லியோங் சாலையில் இன்னோர் ஆடவரை நாற்காலியால் அடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சதீஷ், பிரதேவ் ஆகிய இருவர் மீது தற்போது தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டையும் கிர்த்திக் எதிர்நோக்குகிறார்.
இந்த ஆடவர்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக இரு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நூர் டியானா ஹருண் அல் ரஷீத், கஸ்தூரி காளிதாஸ் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் 24 வயது.
இரு பெண்களும் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பான வழக்குகள் அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குடன் தொடர்புடைய நான்கு ஆடவர்களுக்கும் பிணை வழங்கப்படவில்லை.
அவர்கள் அக்டோபர் 4ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவர்.
தாக்குதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.
ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபடும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
பெண்களுக்கு பிரம்படி விதிக்கப்படாது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சஜித்துக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.