சிங்கப்பூர்க் கடைவீடுகளின் விற்பனையில் லிட்டில் இந்தியா முதலிடம்

சிங்கப்பூர்க் கடைவீடுகளின் விற்பனையில் லிட்டில் இந்தியா முதலிடம்

2 mins read
2025ல் கைமாறிய கடைவீடுகளின் மொத்த மதிப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் குறைவு
bf0ae4d5-cf40-49eb-a1e9-1aee8a7d5f18
லிட்டில் இந்தியா கடைவீடுகள். - தமிழ் முரசு கோப்புப் படம்

கடந்த ஆண்டின் (2025) நான்காம் காலாண்டில் சிங்கப்பூரில் கைமாறிய கடைவீடுகளின் எண்ணிக்கையில் லிட்டில் இந்தியா வட்டாரம் முதலிடத்தில் வந்துள்ளது.

அந்த வட்டாரத்தில் $46.3மில்லியன் மதிப்பிலான மொத்தம் ஏழு கடைவீடுகள் நான்காம் காலாண்டில் விற்பனையாயின.

கடந்த ஆண்டு முழுவதும் லிட்டில் இந்தியாவில் மட்டும் மொத்தம் 24 கடைவீடுகள் விற்பனையாகின என்றும் அவற்றின் மதிப்பு $183 மில்லியனுக்கு மேல் என்றும் புரோப்நெக்ஸ் சொத்து முகவை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தக் கடைவீடுகள் பரிவர்த்தனையில் 25 விழுக்காட்டுக்கும் மேலானவை லிட்டில் இந்தியாவைச் சேர்ந்தவை.

சிங்கப்பூரில் கைமாறும் கடைவீடுகளின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. 2025ன் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 28 பரிவர்த்தனைகள் பதிவான நிலையில் அந்த எண்ணிக்கை இறுதிக் காலாண்டில் 21.4 விழுக்காடு சரிந்து 22ஆகப் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டைக் காட்டிலும் இது 12 விழுக்காடு குறைவு.

கடந்த ஆண்டு பரிவர்த்தனையான கடைவீடுகளின் மொத்த மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் குறைவாக $623.2 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு கடைவீடுகளின் பரிவர்த்தனை உயரக்கூடும் என்று சொத்துச் சந்தைக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். சிங்கப்பூரில் சொத்துச் சந்தையின் நிலைத்தன்மையும் பொருளியல் முன்னுரைப்பு நம்பிக்கையுடன் விளங்குவதும் அதற்குக் காரணம்.

உலகப் பொருளியல் நிலைத்தன்மையின்மை தொடர்ந்த போதிலும் முதலீட்டாளர்கள் அசையாச் சொத்துகளை நாடும் போக்கு தொடரும் என்றும் அதற்கு வணிகத்தைச் சார்ந்திருக்கும் சொத்துகள் தீர்வாகலாம் என்றும் முகவர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்