புத்தாண்டை வரவேற்க அதற்கு முதல் நாளான புதன்கிழமை (டிசம்பர் 31) இரவு காலாங்கிலும் மரினா பேயிலும் நடைபெறும் கொண்டாட்டங்களின் கூட்ட நிலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் நிகழ்நேர புகைப்படங்களை வெளியிடவுள்ளனர்.
கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள நெரிசலைப் பற்றி அறிந்துகொள்ள, பொதுமக்கள் அங்கு செல்வதற்கு முன்பாக Crowd@MarinaBay மற்றும் Crowd@Kallang ஆகிய இரண்டு இணையப்பக்கங்களையும் அன்றையதினம் பார்வையிடலாம்.
அவ்விரண்டு இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகும் என்று காவல்துறை கணித்துள்ளதால், தேவைப்பட்டால் அப்பகுதியில் மேலும் சில இடங்கள் மூடப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மரினா பே, காலாங் ஆகிய இடங்களில் உள்ள நிகழ்நேரக் கூட்ட நிலவரத்தையும் மூடப்பட்ட இடங்களையும் புகைப்படங்கள் காட்டும். நேரத்துக்கு ஏற்ப அவை மாற்றியமைக்கப்படும் என்ற காவல்துறை அதன் இடைவெளி நேரத்தை குறிப்பிடவில்லை.
வரைபடங்களில் உள்ள புகைப்படங்களை அழுத்தி பயனாளர்கள் அவற்றைப் பார்வையிடலாம்.
இணையப்பக்கங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கப்படலாம். மரினா பே பகுதியில் உள்ள நிலவரம் 31ஆம் தேதி 7 மணி முதலும் காலாங் பேசின் வட்டாரக் கொண்டாட்டத்தின் படங்கள் 8.30 மணிக்கும் இணையத்தில் பதிவேற்றப்படும்.
அந்த இரு இடங்களைத் தவிர்த்து, செந்தோசா, கிளார்க் கீ ஆகிய இடங்களுடன் ஏழு குடியிருப்புப் பேட்டைகளிலும் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
காவல்துறையினரும் துணைக்காவல்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் அமர்த்தப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் கொண்டுவரும் தனிப்பட்ட பொருள்கள், பைகள் ஆகியன சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மரினா பே, காலாங் பேசின் பகுதிகளுக்கு சைக்கிள்களில் வரவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“பொதுமக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்துகொள்ளவேண்டாம், அவ்வாறு சட்டத்துக்கு எதிராக நடப்போரின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை நினைவூட்டியது,

