தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹஜ்ஜுப் பெருநாளுக்காக பெர்த்தாபிசில் நேரடிக் குர்பான் சடங்கு

3 mins read
87255ec6-c066-4967-8faa-fb6db21d941b
குர்பான் காணிக்கைக்காக 120க்கும் மேற்பட்ட ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. - படம்: த.கவி
multi-img1 of 2

ஹஜ்ஜுப் பெருநாளன்று (ஜூன் 7) நேரடியாகக் குர்பான் சடங்கைக் காண முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தது பெர்த்தாபிஸ் அறநிறுவனம்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டுதான் பெர்த்தாபிஸ் குர்பான் சடங்கை மீண்டும் தொடங்கியது. சென்ற ஆண்டுபோல இவ்வாண்டும் பெர்த்தாபிஸ் போதையர் மறுவாழ்வு இல்லத்தில் குர்பான் சடங்கு நடைபெற்றது.

மறுவாழ்வு இல்லத்தில் தங்கள் தண்டனைக் காலத்தின் கடைசி தவணையை நிறைவேற்றும் குற்றவாளிகளும் குர்பான் சடங்குக்குத் தொண்டூழியர்களாக உதவினர்.

இவ்வாண்டு பெர்த்தாபிஸ் அமைப்பு, 120க்கும் மேற்பட்ட ஆடுகளை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்திருந்தது. இது சென்ற ஆண்டைவிட அதிகம்.

கிட்டத்தட்ட 120 நன்கொடையாளர்கள் தம் குடும்பத்தினரோடு ஆடுகள் காணிக்கையாகச் செலுத்தப்படுவதைக் காண வந்திருந்தனர்.

அதன்பிறகு, பெர்த்தாபிசின் பயனாளிகளான 500க்கும் மேற்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்கள் நிலையத்துக்கு வந்து குர்பான் இறைச்சி, அத்தியாவசியப் பொருள்கள், $30 ரொக்கம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டன.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.

“சிங்கப்பூரர்கள் குர்பான் செலுத்தப் பல வழிகள் உள்ளன. சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலும் செய்யலாம். அதிகமானோர் வெளிநாட்டு குர்பானை நாடுகின்றனர். சிங்கப்பூரர்கள் உள்ளூர் மக்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டுச் சமூகத்துக்கும் நன்கொடை கொடுக்க விரும்புகின்றனர். இவ்வாண்டு 10 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சியை காஸாவுக்கு அனுப்பவிருக்கிறோம். இது சிங்கப்பூர்களின் பரந்த மனத்தைக் காட்டுகிறது,” என்றார் டாக்டர் ஃபை‌‌‌ஷால்.

இவ்வாண்டு சலாம்எஸ்ஜிவழிக் கொர்பான் செலுத்துவோரின் விகிதம் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 20% அதிகமடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இவ்வாண்டு 10 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சியைக் காஸாவுக்கு அனுப்பவிருக்கிறோம். இது சிங்கப்பூர்களின் பரந்த மனத்தைக் காட்டுகிறது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் 

குர்பான் நன்கொடையாளர்களுக்கும் இறைச்சியின் ஒரு பகுதி அவர்களின் வீட்டிற்கு விநியோகிக்கப்பட்டது.

பெர்த்தாபிஸ், டாருல் அர்காம் சிங்கப்பூருடன் இணைந்து முஸ்லிம் சமயத்துக்கு மாறியவர்களுக்குக் குர்பானை நேரில் கண்டு புரிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கியது.

உள்ளூர் சமூகத்திலும் நேரடி குர்பான் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காகப் பெர்த்தாபிஸ் இதனை ஏற்பாடு செய்தது. சிங்கப்பூரில் குர்பானுக்கான செலவு அதிகமாக இருப்பினும், பலரும் அதைப் பொருட்படுத்தாது காணிக்கைச் செலுத்த வந்திருந்தனர்.

“வெளிநாட்டில் குறைந்த செலவில் குர்பான் செய்ய முடிந்தாலும் என் பிள்ளைகளுக்குக் குர்பானை நேரில் காட்டி அதன் அர்த்தத்தை உணர்த்த விரும்பினேன். அதனால்தான் அவர்களை அழைத்து வந்தேன்,” என்றார் ‘அஜ்மிர் பிரியாணி’ நிறுவனத்தைத் தன் கணவருடன் நடத்தும் பரகத் நி‌‌‌ஷா. அவர் தன் 7 வயது மகள் நூர் சலிஹா, 9 வயது மகன் இஸ்ஹாக் நஸ்முதீன், தந்தை நாசிர் ஆகியோருடன் வந்திருந்தார்.

தன் பிள்ளைகளைக் குர்பானைக் காண அழைத்துவந்த பரகத் நி‌‌‌ஷா. படத்தில் அவருடன் 7 வயது மகள் நூர் சலிஹா, 9 வயது மகன் இஸ்ஹாக் நஸ்முதீன், தந்தை நாசிர்.
தன் பிள்ளைகளைக் குர்பானைக் காண அழைத்துவந்த பரகத் நி‌‌‌ஷா. படத்தில் அவருடன் 7 வயது மகள் நூர் சலிஹா, 9 வயது மகன் இஸ்ஹாக் நஸ்முதீன், தந்தை நாசிர். - படம்: ரவி சிங்காரம்

பிஸ்மி வானொலியைத் தன் சகோதரருடன் நடத்திவரும் சீனி ஜஹாங்கிர், இவ்வாண்டு சிங்கப்பூரிலும் இந்தோனீசியாவின் பாத்தாமிலும் குர்பான் காணிக்கையைத் தந்திருந்தார்.

பிஸ்மி வானொலியைத் தன் சகோதரருடன் நடத்திவரும் சீனி ஜஹாங்கிர்.
பிஸ்மி வானொலியைத் தன் சகோதரருடன் நடத்திவரும் சீனி ஜஹாங்கிர். - படம்: ரவி சிங்காரம்

“சிங்கப்பூரில் பல அமைப்புகளும் ஏற்கெனவே அறத்தொண்டுகளில் ஈடுபட்டுள்ளதால் தொண்டு செய்ய வெளிநாட்டையும் நாடினோம். அதனால், பாத்தாமில் ஓர் ஆதரவற்ற இல்லத்தில் குர்பான் இறைச்சியை விநியோகித்தோம். அதே சமயம், சிங்கப்பூரிலும் குர்பான் செய்தோம்,” என்றார் சீனி ஜஹாங்கிர்.

இவ்வாண்டு சிங்கப்பூரில் நேரடி குர்பான் செய்வதற்கான விலை 2024 ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்று குறைவாக இருந்தது. 2024ல் ஓர் ஆட்டுக்கு $667 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாண்டு, ஓர் ஆட்டின் விலை $659. உள்ளூர் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் கேட்டால் விலை தொடர்ந்து குறையும் என பெர்த்தாபிஸ் குர்பான் சடங்குக்கான ஆடுகளை வழங்கிய ஆலியா ரிஸ்க் பண்ணை கூறியது.

குறிப்புச் சொற்கள்