நோயியல் மருத்துவ வல்லுநர் ஐலீன் வீ, அவருடைய மருத்துவப் பயணத்தின் இறுதி 50 ஆண்டுகளில் கல்லீரல் நோய்களுக்கான காரணங்களைக் கண்டறியும் பணிகளில் அதிகம் ஈடுபட்டார்.
கொழுப்படைந்த கல்லீரல், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சுருக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள உயிரணு, திசு மாற்றங்களை ஆராய்வதும் அவற்றில் அடங்கும்.
75 வயதாகும் பேராசிரியர் ஐலீன் வீ, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் பேராசிரியராக இருக்கிறார். கொழுப்படைந்த கல்லீரல் மோசமாகும் நிலையை மதிப்பிடுவதற்கு அண்மையில் இவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். உலக அளவில் அந்த மருத்துவப் பிரச்சினை பெரும் சுமையாக உருவெடுத்து வருகிறது.
புதிய சிகிச்சைகளின் விளைவுகளையும் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளையும் மதிப்பிடுவதில் காரணிகளைத் துல்லியமாகக் கணக்கிடுவது முக்கியம். நோயின் தீவிரம், அது எத்தனை காலம் உள்ளது போன்றவற்றோடு காரணிகளுக்குத் தொடர்புண்டு.
இவரின் பணியையும் புதிய முயற்சிகளையும் அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லிங் மருத்துவப் பள்ளி, பேராசிரியர் ஐலீன் வீயின் பெயரில் பேராசிரியர் பதவியைத் தொடங்கியுள்ளது. ‘கல்லீரல் நோய்களுக்கான ஐலின் வீ பேராசிரியர் பதவி’ எனும் அது, இம்மாதம் 11ஆம் தேதி ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தலைசிறந்த சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இது ஆக அண்மையது. மருத்துவ அறிவியல் துறையில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதும் இதன் நோக்கம்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதை இது ஊக்குவிக்கிறது. புற்றுநோய் போன்ற நோய்களை ஆராயவும் புதிதாக உருவாகும் சுகாதாரப் பராமரிப்புச் சவால்களைக் கையாளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
“நோயாளிகளின் நலனுக்காக, பாதிக்கப்பட்ட கல்லீரலில் இன்னும் அறியப்படாத பல உண்மைகளைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள கல்விமான்களுக்கு இது உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் பேராசிரியர் ஐலீன் வீ.

