தமிழ்நாட்டில் அமரர் லீக்கு நினைவுச்சின்னம்

மறைந்த பிரதமர் லீ குவான் இயூவின் மகத்துவத்தையும் உன்னத பங்களிப்புகளையும் பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டில் அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பப்பட இருக்கிறது.

மன்னார்குடியில் திரு லீயின் திருவுருவச் சிலையும் அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அதிகாரபூர்வப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகைபுரிந்த திரு ஸ்டாலினுக்கு சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் சார்பில் மே 24  மாலை சன்டெக் சிட்டி மாநாட்டு, கண்காட்சி மையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகெங்கும் பரவி வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு அரணாகத் தமிழகம் விளங்கும் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்தது முதல்வரின் உரை.

சிங்கப்பூர்த் தமிழ் மக்களையும் பண்பாடு ததும்பும் சூழலையும் பாராட்டிய அவர், “கடல் கடந்து நான் வந்தது போலன்றி, தமிழ்நாட்டிலேயே இருப்பது போன்ற உணர்வே இருக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

தமிழுணர்வால் இணைந்து, சாதி, மதம் பிளவுபடுத்த முடியா சிங்கப்பூர் சமூகத்தை வளர்த்தெடுப்பதில் அமரர் லீ, பின்னர் திரு கோ சோக் டோங், இப்போது திரு லீ சியன் லூங் ஆகிய சிங்கப்பூர் பிரதமர்களின் பெரும்பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறைந்த முன்னாள் அதிபர் எஸ் ஆர். நாதன் நாட்டு நிர்வாகத்தில் மேற்கொண்ட பணியை திரு ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.

சீர்திருத்தச் சங்கத்தை ஏற் படுத்தி, முதல் தமிழ் நாளிதழாக தமிழ் முரசைத் தோற்றுவித்து, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடங்கி, சிங்கப்பூரில் தமிழர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்ந்த தமிழவேள் கோ. சாரங்கபாணியின் பெரும் பங்களிப்பை அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தாம் தொடங்கிய அயலகத் தமிழர் நல வாரியத்தின் திட்டங்கள் தொடர்ந்து வெளிநாட்டுத் தமிழர்களை அரவணைக்கும் என்றார் அவர்.

கலையியல், பண்பாட்டுப் பரிமாற்றங்கள், இளையர் சுற்றுலா ஏற்பாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்ட சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் திரு ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், “தற்போது 280 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு கொண்டுள்ளார். மிக விரைவில் சிங்கப்பூரைவிட தமிழ்நாட்டின் ஜிடிபி அதிகமாகும் என நம்புகிறேன்," என்றார்.

பண்பாட்டுச் சுற்றுலாத் தளமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு சிங்கப்பூர் தமிழர்கள் வந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு கேட்டுக்கொண்டார்.

ஏறத்தாழ 60 தமிழ் அமைப்புகள் சேர்ந்து, இந்நிகழ்வை முன்னெடுத்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆர். ரவீந்திரன் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!