கடன் முதலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக 32 வயது பெண்ணும் 27 வயது ஆடவரும் டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இருவரும் வெவ்வேறு கடன் முதலை அச்சுறுத்தல் சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
முதல் சம்பவம் டிசம்பர் 22ஆம் தேதி கேன்பரா ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. வீட்டின் கதவு, சுவர் சிவப்பு நிற சாயத்தால் சேதப்படுத்தப்பட்டன. மேலும் கதவு சைக்கிள் பூட்டால் பூட்டப்பட்டு கடன் தொடர்பான கடிதம் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது, அதன் பின்னர் 32 வயது மாது கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது அச்சுறுத்தல் சம்பவம், உட்லண்ட்ஸ் டிரைவ் 44இல் டிசம்பர் 24ஆம் தேதி நடந்தது. இங்கும் வீட்டிக் கதவுகளில் சிவப்பு சாயம் அடிக்கப்பட்டது.
காவல்துறை நடத்திய விசாரணையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 சிவப்பு சாயம் தெளிக்கும் புட்டிகள் கைப்பற்றப்பட்டன.
இருவர் மீதும் வியாழக்கிழமை (டிசம்பர் 26) குற்றஞ்சாட்டப்பட்டது.
கடன் முதலை அச்சுறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதமும் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். மேலும் 6 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.