உட்லண்ட்ஸ் பகுதியிலுள்ள ஸ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏறத்தாழ 200 கிலோ அளவிலான வெள்ளி வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன.
கோவிலிலுள்ள கடவுள் சிலைகளுக்கு மொத்தம் 36 வெள்ளி அங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் கோவிலின் தலைவர் த. சுரேஷ் குமார், 52. இதற்கான பணிகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் பணியிடம் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ் நிறுவனம் செய்துள்ளது. பொதுவாக பெரிய வெள்ளி வேலைப்பாடுகள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரவழைக்கப்படும் என்றும் இம்முறை அனைத்து வேலைப்பாடுகளும் உள்ளூரில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் சொன்னார் நிறுவனத்தின் உரிமையாளர் பழனியப்பன் ராமநாதன், 47.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இப்பணிகள் நடைபெற்றதாகச் சொன்னார் ராமநாதன். உள்ளூர்க் கலைஞர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து நால்வரும் வரவழைக்கப்பட்டனர்.
கோவிலில் இருந்த வெள்ளி உருக்கப்பட்டு முதலில் பட்டைகளாக மாற்றப்பட்டன. பின், அனைத்து சிலைகளின் அளவுகளும் குறிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஏற்றார்போல மெழுகு அச்சுகள் உருவாக்கப்பட்டன. அவற்றை சிமெண்ட் அச்சில் சேர்த்து, உருக்கிய வெள்ளி அதில் கவனமாக ஊற்றப்படும்.
அது குளிர்ந்து திடமான பின்பு, பட்டை தீட்டப்படும். இதில் பட்டை தீட்டுவது தவிர மற்ற அனைத்துப் பணிகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றதைக் குறிப்பிட்டார் ராமநாதன்.
“கொடுக்கப்பட்ட பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில், சிறு சிறு நுணுக்கங்களைக் கூட கவனத்துடன் கையாண்டோம்,” என்றார் அவர்.
மேலும், “பொதுவாக அங்கிகளில் வெள்ளி வேலைப்பாடுகள் மட்டும் செய்யப்படும். ஆனால், அவற்றுக்கு மேலும் அழகூட்டவும், சிறு அழகியல் கூறுகளைத் தனித்து எடுத்துக்காட்டும் விதமாக வண்ணக் கற்களையும் பயன்படுத்தியுள்ளோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சிலைகளின் கழுத்தில் அணியும் ஆரம், பதக்கங்கள் போன்றவற்றிலும், கிரீடம், கம்மல், ஒட்டியானம் உள்ளிட்ட பகுதிகளிலும் ‘சிர்க்கான்’ எனும் நகைகளில் பயன்படுத்தப்படும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
“பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் அங்கிகள், அங்கிருந்து கொண்டு வரப்படும்போது ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். அவற்றைப் பொருத்தும்போது மிகச் சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதை உணர முடியும். அப்போது அதனைச் சரிபார்க்கும் பணிகள் நடக்கும். இங்கேயே பணிகள் நடந்ததால் துல்லியமான அளவில் அங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் ராமநாதன்.
“இதற்காக ஒவ்வொரு சிலை, அதன் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விரிவான வடிவங்கள், அவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றைக் குறித்து தெரிந்துகொண்டோம். அது ஒரு புதுமையான அனுபவம்,” என்றார் அவர்.
வெள்ளி வேலைப்பாடுகள், சொர்ண பந்தனம் எனும் தங்க வேலைப்பாடுகள் செய்யும் பணிகளில் உள்ளூர் நிறுவனத்தை ஈடுபடுத்தியது பாராட்டத்தக்கது என்றும் அது ஊக்கமளிக்கும் விதமாக அமைந்ததுடன், தங்களால் சிறப்பாக பெரும் பணிகளையும் மேற்கொள்ள முடியும் எனும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் தெரிவித்தார் அவர்.
இந்த வெள்ளி, தங்க வேலைப்பாடுகளுடன், மொத்தம் 20 வழிபாட்டுக்குரிய பொருள்களையும் இவர்கள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக ஏறத்தாழ 300 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டதாகவும் சொன்னார் கோவிலின் தலைவர் த. சுரேஷ் குமார்.